மக்களவைத் தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர்! ரூ.5,785 கோடியுடன் என்ஆர்ஐ மருத்துவர்

மக்களவைத் தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர்! ரூ.5,785 கோடியுடன் என்ஆர்ஐ மருத்துவர்

ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரே மக்களவைத் தேர்தலில் மிக அதிக சொத்து உடையவர் என்று தெரிய வந்துள்ளது.

ஆந்திரத்தின் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பிரிவைச் சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான பி.சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

வேட்புமனுவில் தெரிவித்துள்ள விவரங்களின்படி, சந்திரசேகர், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,785 கோடியாகும். அதன்படி, தற்போதுவரை மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளராக அவர் திகழ்கிறார்.

சந்திரசேகருக்கு ரூ.2,448.72 கோடி சொத்துகளும் அவரது மனைவிக்கு ரூ.2,343.78 கோடி சொத்துகளும் குழந்தைகளின் பெயரில் சுமார் ரூ.1,000 கோடி சொத்துகளும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவின் ஜெ.பி.மோர்கன் வங்கியில் ரூ.1,138 கோடி கடன் இருக்கிறது.

ஆந்திரத்தின் புர்ரிபலேம் எனும் குக்கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தது முதல், இணையவழி கற்றல் தளமான "யூவர்ல்ட்' நிறுவியது வரை சந்திரசேகரின் பயணம் மிகவும் சுவாரஸ்யமானது ஆகும்.

முதல் கட்ட தேர்தலில், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத்தின் மகன் நகுல் நாத் ரூ.717 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் இருந்ததது குறிப்பிடத்தக்கது.

சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷுக்கு ரூ.542.7 கோடி குடும்ப சொத்து: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திர மாநிலம், மங்களகிரி தொகுதியில் கட்சி வேட்பாளருமான நாரா லோகேஷுக்கு ரூ.542.7 கோடி குடும்ப சொத்து இருப்பதாக தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தில் சட்டப்பேரவைக்கும் 25 மக்களவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் வரும் மே 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனை, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் முன்னப்பில் தேர்தலைச் சந்திக்கின்றன.

இந்நிலையில், மங்களகிரி சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் எம்.லாவண்யா போட்டியிடுகிறார்.

இதையொட்டி, தேர்தல் ஆணையத்தில் லோகேஷ் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, தனது குடும்பத்துக்கு ரூ.542.7 கோடி சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"ஹெரிடேஜ் ஃபுட்ஸ்' நிறுவனத்தில் மட்டும் தங்களின் குடும்பத்துக்கு ரூ.339.11 கோடி மதிப்பிலான பங்குகள் இருப்பதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவி பிராம்மணி அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார்.

அதன்படி, லோகேஷுக்கு ரூ.314.68 கோடி அசையும் சொத்துகளும் ரூ.92.31 கோடி அசையாத சொத்துகளும் உள்ளன. அவரது மனைவி பிராம்மணிக்கு ரூ.45.06 கோடி அசையும் சொத்துகளும் ரூ.35.59 கோடி அசையாத சொத்துகளும் உள்ளன.

கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் ரூ.373.63 கோடி குடும்ப சொத்துகள் இருப்பதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.

தெலங்கானா பாஜக வேட்பாளருக்கு ரூ.4,568 கோடி சொத்து: தெலங்கானா, செவ்வெல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பார் கே.விஸ்வேஸ்வர் ரெட்டிக்கு ரூ.4,568 கோடி குடும்ப சொத்துகள் இருப்பதாக தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவியும் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் சி.பிரதாப் ரெட்டியின் மகளுமான சங்கீதா ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் கூடுதல் மேலாண் இயக்குநராக உள்ளார்.

விஸ்வேஸ்வர் ரெட்டிக்கு ரூ.1,250 கோடி மதிப்பிலான சொத்துகளும், மனைவிக்கு ரூ.3,209.41 கோடி மதிப்பிலான சொத்துகளும் மற்றவை மகன் பெயரில் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாணுக்கு ரூ.164 கோடி சொத்து: எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் பிதாப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜன சேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் போட்டியிடுகிறார். இதையொட்டி, அவர் தாக்கல் வேட்புமனு தேர்தல் ஆணையத்தில் வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

வேட்புமனுவில் அளித்துள்ள விவரங்களின்படி, அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.164.53 கோடி என்றும் கடன் ரூ.65.77 கோடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரூ.14 கோடி மதிப்புள்ள 11 வாகனங்கள் அவருக்குச் சொந்தமாக இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com