கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

அகிலேஷ் யாதவுக்காக கன்னோஜ் தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார் தேஜ் பிரதாப் யாதவ்.
கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!
படம் | பிடிஐ

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் அம்மாநிலத்தின் கன்னோஜ் மக்களவை தொகுதியில் இம்முறை போட்டியிட உள்ளதாக சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

80 மக்களவை தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக இருப்பது கன்னோஜ். ஏற்கெனவே, 2000, 2004, 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் கன்னோஜ் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வென்ற அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச முதல்வராக 2012இல் பொறுப்பேற்ற பின், தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கன்னோஜில் களம் காணுகிறார் அகிலேஷ்.

நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளான மே-4இல் கன்னோஜ் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கன்னோஜ் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் நாளை(ஏப். 25) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கன்னோஜ் தொகுதியில் சமாஜவாதி கட்சி வேட்பாளராக அகிலேஷ் யாதவின் சகோதரரின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அகிலேஷ் யாதவ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தனது மாமா அகிலேஷ் யாதவுக்காக கன்னோஜ் தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார் தேஜ் பிரதாப் யாதவ்.

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மருமகனான தேஜ் பிரதாப் யாதவ், கன்னோஜில் களம் கண்டால், பாஜக அந்த தொகுதியில் வெற்றி பெறும் வாய்ப்பிருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அகிலேஷ் யாதவ் கன்னோஜில் போட்டியிட உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், இத்தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை விட கூடுதல் வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் சுப்ராத் பதக் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com