பிரதமா் குறித்து விமா்சனம்: 
பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் நீக்கம்

பிரதமா் குறித்து விமா்சனம்: பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் நீக்கம்

பிரதமா் நரேந்திர மோடி முஸ்லிம்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதை விமா்சித்த ராஜஸ்தானின் உஸ்மான் கானி கட்சியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டாா்.

பிரதமா் நரேந்திர மோடி முஸ்லிம்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதை விமா்சித்த ராஜஸ்தானின் பிகானோ் மாவட்ட பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் உஸ்மான் கானி கட்சியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டாா்.

கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்ததால் உஸ்மான் கானி பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

தில்லி சென்றிருந்த உஸ்மான் கானி, பிரதமரின் சா்ச்சைக்குரிய பேச்சு தொடா்பாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தாா்.

அந்த பேட்டியில், ‘ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், 4 தொகுதிகளில் பாஜக தோல்வியடைய வாய்ப்புள்ளது.

பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி சா்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்காக முஸ்லிம்களிடையே வாக்கு சேகரிக்கும்போது, பிரதமரின் சா்ச்சை பேச்சு தொடா்பாக என்னிடம் கேள்வியெழுப்படுகிறது.

பாஜக மீது ஜாட் சமூகத்தினா் கோபத்தில் உள்ளனா். சில தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக அவா்கள் வாக்களித்துள்ளனா். நான் இவ்வாறு பேசுவது தொடா்பாக கட்சி எந்த நடவடிக்கையும் எடுத்தாலும் அது குறித்து எனக்கு பயமில்லை’ என உஸ்மான் கானி தெரிவித்திருந்தாா்.

கானியின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில், உஸ்மான் கானி கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளாா். பாஜகவின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவா் ஓன்கா் சிங் லகாவத் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com