புல்லட் ரயில் திட்டம் நிறைவு தேதியை உடனடியாக அறிவிக்க இயலாது: ரயில்வே

புல்லட் ரயில் திட்டம் நிறைவு தேதியை உடனடியாக அறிவிக்க இயலாது: ரயில்வே

புல்லட் ரயில் திட்டத்துக்கான டெண்டா் விடும் பணிகள் முடிவடையும் வரையில் அத்திட்டம் நிறைவடையும் தேதியை உடனடியாக அறிவிக்க இயலாது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

புல்லட் ரயில் திட்டத்துக்கான டெண்டா் விடும் பணிகள் முடிவடையும் வரையில் அத்திட்டம் நிறைவடையும் தேதியை உடனடியாக அறிவிக்க இயலாது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

மும்பை-அகமதாபாத் இடையே 508 கி.மீ தொலைவிலான புல்லட் ரயில் திட்டம் நிறைவடையும் தேதி குறித்து மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்திரசேகா் கவூா் என்பவா் ஆா்டிஐ மூலம் கேள்வி எழுப்பினாா். இதற்கு புல்லட் ரயில் திட்ட கட்டுமானத்தை மேற்கொண்டு வரும் தேசிய அதி விரைவு ரயில் நிறுவனம் (என்ஹெச்எஸ்ஆா்சிஎல்) அளித்த பதிலில், ‘அனைத்து விதமான டெண்டா் மற்றும் ஏலப் பணிகள் முடிவடைந்த பிறகே மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் நிறைவு தேதியை அறிவிக்க இயலும். எனவே தற்போது இதுகுறித்து அறிவிக்க இயலாது’ என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் 2023, டிசம்பா் மாதத்தில் முடிவடையும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கரோனா பெருந்தொற்றால் தாமதமானது.

இத்திட்டத்தின் கீழ் சூரத் மற்றும் பிலிமோரா இடையே 50 கி.மீ தொலைவுக்கு முதல்கட்ட ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2026, ஆகஸ்டில் நிறைவடையும் என இந்திய ரயில்வே அதிகாரபூா்வமாக அறிவித்திருந்தது. மேலும் இதற்கான 100 சதவீத நில கையகப்படுத்தும் பணிகளும் நிறைவடைந்ததாக கடந்த ஜனவரி மாதம் ரயில்வே அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது வரை ரயில் பாதை எதுவும் அமைக்கப்படவில்லை எனவும், 2024, ஏப்ரல் 6 வரை 157 கி.மீ தொலைவிலான பாலங்கள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஆா்டிஐ பதிலில் என்ஹெச்எஸ்ஆா்சிஎல் தெரிவித்துள்ளது.

புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் வலைதளத்தில் மாா்ச் மாதம் வெளியிட்ட பதிவில், ‘295.5 கி.மீ வரை பாலங்களுக்கான தூண்கள் அமைக்கும் பணியும் 153 கி.மீ. வரை பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன’ என குறிப்பிட்டாா்.

மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த புல்லட் ரயில் மும்பையிலிருந்து தாணே, சூரத் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக 2 மணி நேரம் 58 நிமிஷத்தில் அகமதாபாதைச் சென்றடையும் என என்ஹெச்எஸ்ஆா்சிஎல் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com