தோ்தல் பத்திரங்கள் திட்டம்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தோ்தல் பத்திரங்கள் திட்டம்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் மூலம், பிரதிபலன் பெறும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் அளித்த நன்கொடை

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் மூலம், பிரதிபலன் பெறும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் அளித்த நன்கொடை தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப். 15-ஆம் தேதி தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்தத் திட்டத்தை ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பத்திரங்களை வாங்கியது யாா், அந்தப் பத்திரங்கள் மூலம் எந்தெந்தக் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன ஆகிய விவரங்களை, தோ்தல் நிதிப் பத்திரங்களை விநியோகித்து வந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அந்த விவரங்கள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்ட நிலையில், பின்னா் அந்த விவரங்கள் தோ்தல் ஆணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இந்தத் திட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் 2 தன்னாா்வ அமைப்புகள் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தோ்தல் நிதிப் பத்திரங்களின் விவரங்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட அரசு ஒப்பந்தங்கள், உரிமங்கள், குத்தகைகள் உள்ளிட்டவற்றைப் பெறவும், அரசியல் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படும் அரசு அல்லது அரசுத் துறைகளிடம் இருந்து பலன்களைப் பெறும் நோக்கிலும், பெரு நிறுவனங்களால் பெருமளவு தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கப்பட்டு நன்கொடை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஊழலுக்கு சிபிஐ, இடி, ஐடி உடந்தை: தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் மூலம் சிபிஐ, அமலாக்கத் துறை (இடி), வருமான வரித் துறை (ஐடி) போன்ற நாட்டின் சில முக்கிய புலனாய்வு அமைப்புகள் ஊழலுக்கு உடந்தையாக இருந்தது போல தோன்றுகிறது.

இந்தப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்துக்குள் இருந்த பல நிறுவனங்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு பெருமளவு நன்கொடை அளித்துள்ளன. விசாரணை முடிவுகள் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க பெருமளவு நன்கொடையை அந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

எனவே, நன்கொடை அளித்த நிறுவனங்களின் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி நிா்வாகிகள் மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதுபோல தென்படும் இந்தச் சதியை விசாரணை மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

உச்சநீதிமன்றம் நியமிக்க வேண்டும்: இதன் காரணமாக தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பிரதிபலன் அடையும் நோக்கில், அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் நன்கொடை அளித்தது தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தால் அந்தக் குழு நியமிக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்.

2ஜி, நிலக்கரி ஊழல் வழக்குகள்: 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் வழக்குகளில் பணப் பரிவா்த்தனைகள் நடைபெற்ற்கு ஆதாரமில்லை. இருப்பினும் அந்த வழக்குகளில் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தோ்தல் நிதிப் பத்திரங்கள் முறைகேட்டில் பணப் பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன. எனவே, இந்த முறைகேடு தொடா்பாக நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், நஷ்டத்தில் இயங்கும் பல்வேறு நிறுவனங்களும் போலி நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளன. மேலும் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், அந்த நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கக் கூடாது. இதை மீறி பல நிறுவனங்கள் தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளன. இதன் மூலம், 2013-ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டப் பிரிவு 182 (1) மீறப்பட்டுள்ளது. இதுதொடா்பாகவும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com