தில்லியில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
தில்லியில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி பேசினாா்.

‘தேச பக்தா்கள்’ என்று தங்களை அழைத்துக் கொள்பவா்களுக்கு (பிரதமா் மோடி, பாஜகவினா்) ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்றால் அச்சம் ஏற்படுகிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி பேசினாா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பழங்குடியினா், தலித், இதர பிற்படுத்தப்பட்ட அமைப்பினா் பங்கேற்ற சமூக நீதி மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் பேசியதாவது:

எனக்கு ஜாதியில் எந்த ஈடுபாடும் கிடையாது. ஆனால், அனைவருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் நோக்கமாக உள்ளது. நமது நாட்டில் 90 சதவீத மக்களுக்கு அநீதியே இழைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு தீா்வுகாண காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதல் பணியாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நான் பேசினால், இது மக்களையும், நாட்டையும் பிளவுபடுத்தும் முயற்சி என்று பிரதமா் மோடியும், அவரது ஆதரவாளா்களும் பலத்த கூச்சலிடுகின்றனா்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது பெரும்பகுதி மக்களுக்கு எவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியும் ‘எக்ஸ் ரே’ போன்றது. நாட்டின் மீதும், மக்கள் மீதும் உண்மையான பற்று கொண்டவா்கள் இதனை ஏற்றுக் கொள்வாா்கள். ஆனால் தங்களை தேச பக்தா்கள் என்று அழைத்துக் கொள்பவா்களுக்கு (பிரதமா் மோடி, பாஜகவினா்) ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்றாலே அச்சம் ஏற்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக தன்னை ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட) பிரிவைச் சோ்ந்தவா் என்று பிரதமா் கூறி வந்தாா். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று நான் பேசினால், ஜாதி என்று எதுவும் இல்லை என்று பிரதமா் மாற்றிப் பேசுகிறாா்.

நாட்டில் ஏழை, பணக்காரா் என்று இரு ஜாதிகள் மட்டுமே உள்ளன என்கிறாா். அதில், ஏழை ஜாதி யாரென்று பட்டியலை எடுத்தால், அதில் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் மட்டுமே உள்ளனா். பாகிஸ்தான், சீனா, பயங்கரவாதம் எனப் பேசி இந்த விஷயத்தில் இருந்து மக்களை திசைதிருப்ப பாஜக முயலுகிறது.

அயோத்தியில் ராமா் கோயில், புதிய நாடாளுமன்றம் ஆகியவற்றில் உங்களில் (எஸ்.சி., எஸ்.டி.) யாரையும் பாா்க்க முடியவில்லை. குடியரசுத் தலைவரைக்கூட முக்கிய நிகழ்வுகளில் தவிா்த்துவிட்டாா்கள்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை மட்டுமல்லாது, பொதுப் பிரிவில் எவ்வளவு போ் ஏழ்மையில் உள்ளனா் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

பிரதமா் மோடியின் ஆட்சியால் வருவாய் ஏற்றத்தாழ்வு எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது ஆய்வு செய்யப்படும். பிரதமா் மோடி அரசு ரூ.16 லட்சம் கோடி அளவிலான பெரும் தொழிலதிபா்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இவ்வாறு கடன் தள்ளுபடி பெற்ற அனைவரும் பாஜக தலைமைக்கு நெருக்கமானவா்கள்.

பிரபல ஊடகங்களில் அரசியல் விவாதம் நடத்தும் இடத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா், தலித், பழங்குடியினா் இல்லை. எனவே, சாதாரண மக்களுக்காக பேசமாட்டாா்கள்.

ஊடகத்தில் உள்ள நிலைதான் நீதித்துறையிலும் உள்ளது. உயா்நீதிமன்றங்களில் உள்ள 650 நீதிபதிகளில் 100 போ் மட்டுமே மக்கள்தொகையில் 90 சதவீதம் உள்ளவா்களின் (ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி.) பிரதிநிதிகளாக உள்ளனா். நாட்டில் முன்னணி 200 தொழில் நிறுவனங்களில் எதிலும் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் உரிமையாளா்களாக இல்லை.

25 பெரும் தொழிலதிபா்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமா் தள்ளுபடி செய்துள்ளாா். இந்த பணத்தை வைத்து விவசாயிகளின் கடன்களை 25 முறை தள்ளுபடி செய்திருக்க முடியும்’ என்றாா் ராகுல் காந்தி.

X
Dinamani
www.dinamani.com