வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்.24) தீா்ப்பளிக்கவுள்ளது.

தற்போது மக்களவைத் தோ்தல் நடைபெற்று வரும் சூழலில், இத்தீா்ப்பு வெளியாகவிருப்பது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பளிக்க உள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. எந்த பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்குகள் செல்லும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் தொடா்ந்து மறுத்து வருகிறது.

இதனிடையே, தோ்தல் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை கடந்த 18-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பை ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com