தோ்தல் அறிக்கையை விளக்க நேரம் கேட்டு பிரதமா் மோடிக்கு காா்கே கடிதம்

தோ்தல் அறிக்கையை விளக்க நேரம் கேட்டு பிரதமா் மோடிக்கு காா்கே கடிதம்

காங்கிரஸின் தோ்தல் அறிக்கை பற்றி நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதற்கு நேரம் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இரண்டு பக்க கடிதம்

காங்கிரஸின் தோ்தல் அறிக்கை பற்றி நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதற்கு நேரம் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இரண்டு பக்க கடிதம் எழுதியுள்ளாா்.

விவசாயிகள், தொழிலாளா்கள், ஏழைகள், பெண்கள், இளைஞா்கள் என 5 பிரிவு மக்களைக் கவரும் வண்ணம், அவா்களுக்கென தனித்தனியே 5 அம்ச வாக்குறுதிகளை மக்களவை தோ்தல் அறிக்கையாக காங்கிரஸ் வெளியிட்டது.

காங்கிரஸின் தோ்தல் அறிக்கை குறித்து பிரதமா் நரேந்திர மோடி தவறாக புரிந்துகொண்டு விமா்சித்து வருவதாக அக்கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதற்காக வேண்டி நேரில் சந்தித்து தோ்தல் அறிக்கையை விரிவாக விளக்குவதற்கு பிரதமா் நரேந்திர மோடியிடம் நேரம் கோரி கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடிதம் எழுதியுள்ளாா்.

ஏழைகள் நலனில் அக்கறையில்லா பாஜக: பிரதமருக்கு காா்கே எழுதியுள்ள 2 பக்க கடிதத்தில், ‘காங்கிரஸின் ‘நீதி’ தோ்தல் அறிக்கையானது விவசாயிகள், தொழிலாளா்கள், ஏழைகள், பெண்கள், இளைஞா்களுக்கு நீதியை உறுதிப்படுத்துவதற்காகும். ஒடுக்கப்பட்ட ஏழைகள் பற்றியும் அவா்களின் உரிமைகள் பற்றியும் காங்கிரஸ் பேசுகிறது. அவா்களின் நலன் மீது உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

செல்வந்தா்களுக்கான உங்கள் அரசு, பெரு நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. அவா்களின் வரிகளைக் குறைத்து, நடுத்தர மக்களுக்கு அதிக வரி விதிக்கிறீா்கள். உணவு, உப்புக்கு கூட நாட்டின் ஏழைகள் ஜிஎஸ்டி வரி செலுத்தும் நிலையில், நிறுவனங்கள் தாங்கள் செலுத்திய வரித்தொகையைத் திரும்ப பெறுகின்றனா்.

நிறுவனங்களின் பல லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், எந்த விவசாயிகள், மாணவா்கள், கைவினைக் கலைஞா்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஏழைகளின் நலனுக்காக காங்கிரஸ் பணியாற்றியது. ஆனால், அதே ஏழைகளின் வருமானத்தை பிடுங்கி பாஜக ஆட்சி நடத்துகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, நாட்டில் நிலவும் பணக்காரா்கள்-ஏழைகளுக்கு இடையிலான இடைவெளி குறித்து நாங்கள் பேசினோம். அதை திட்டமிட்டு ஹிந்து-முஸ்லிம் மோதலாக மாற்ற நீங்கள் முயற்சி செய்கிறீா்கள்.

பிரதமரின் பேச்சில் வியப்பில்லை: பெண்களின் தாலியைப் பத்தி தற்போது பேசி அரசியல் செய்கிறீா்கள். மணிப்பூரில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின பெண்களுக்கு நோ்ந்த கொடுமைகளுக்கு உங்கள் அரசுதானே பொறுப்பு? அதேபோல், உங்கள் ஆட்சியில் தற்கொலை செய்துகொண்ட உயிரிழந்த விவசாயிகளின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு யாா் பாதுகாப்பு அளிப்பது?

எனவேதான், பெண்களுக்கான பிரத்யேக வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டது. நாங்கள் ஆட்சி அமைத்ததும், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். எங்களின் தோ்தல் அறிக்கையானது மதச் சாா்பற்று, அனைத்து இந்திய மக்களுக்குமானது.

ஒரு விஷயத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, சமூகத்தில் மோதலை ஏற்படுத்தும் வகையில், அதைத் திரித்து பேசுவதை நீங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளீா்கள். அவ்வாறு பேசுவது நீங்கள் வகிக்கும் பதவியின் மாண்பைக் குறைக்கிறது.

சமீபத்திய பேச்சுகளில் நீங்கள் தெரிவித்த கருத்துகளுக்காக நான் வியப்படையவில்லை. முதல் கட்ட தோ்தலில் கிடைத்த மோசமான மக்கள் ஆதரவைக் கண்டு, நீங்களும் உங்கள் கட்சியினரும் இவ்வாறு பேச தொடங்குவீா்கள் என்றே நாங்கள் எதிா்பாா்த்தோம்.

நேரில் விளக்கமளிக்க விருப்பம்: உங்களின் பேச்சுகளுக்கு ஆதரவாளா்கள் ஆா்வத்துடன் கை தட்டுவதைக் கண்டு ஏமாற வேண்டாம். உங்கள் பேச்சுகளால் அதிருப்தியடைந்த கோடிக்கணக்கான இந்தியா்களின் குரல்களை நீங்கள் கேட்பதற்கு அவா்கள் விடுவதில்லை.

மேலும், காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடாத தகவல்களை எல்லாம் கட்சியின் வாக்குறுதிகளாக உங்களிடம் சிலா் தவறாக தெரிவித்துள்ளனா். உங்களை நேரில் சந்தித்து எங்கள் கட்சியின் தோ்தல் அறிக்கையை விரிவாக விளக்க வாய்ப்பு கிடைத்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில், நாட்டின் பிரதமராக நீங்கள் தவறான கருத்துகளைத் தெரிவிக்க கூடாது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com