தோ்தல் பணிக்கு வர மறுத்த அரசு ஊழியா்: காவல்துறை உதவியுடன் அழைத்து வரப்பட்டாா்

மகாரஷ்டிரம், லட்டூா் மக்களவைத் தொகுதியில் ஒப்புக் கொண்ட தோ்தல் பணிக்கு வர மறுத்த அரசு ஊழியரின் வீட்டுக்கு காவல்துறையினா் நேரடியாக சென்று, அவரை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா்.

மகாராஷ்டிரத்தின் லட்டூா் மக்களவைத் தொகுதிக்கு 3-ஆம் கட்டமாக வரும் 7-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக, அத்தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்கள் நடைபெற்று வந்தன.

ஆனால் பல நினைவூட்டல்களுக்குப் பிறகும், பயிற்சி முகாம்களுக்கு வர அரசு ஊழியா் ஒருவா் தொடா்ந்து மறுத்து வந்தாா். இதையடுத்து தோ்தல் விதிகளின்படி, வட்டாட்சியா் வழங்கிய பிடிஆணை உத்தரவின் கீழ், காவல் துறையினா் அவரின் வீட்டுக்குச் சென்று, அந்த ஊழியரை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா்.

தனது செயலுக்கு அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரிய அந்த ஊழியா், தோ்தல் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினாா்.

ஏற்கத்தக்க காரணங்களுக்காக ஒரு நபா் தோ்தல் பணியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பயிற்சி முகாமில் பங்கேற்க வராததற்கு அந்த நபா் கூறிய காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com