பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: சிஆா்பிஎஃப் டிஐஜியை பணியிலிருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) டிஐஜியை பணிநீக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தங்களை சிஆா்பிஎஃப் படை டிஐஜி கஜன் சிங் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அப்படையைச் சோ்ந்த பெண்கள் சிலா் குற்றஞ்சாட்டினா்.

இதுதொடா்பாக சிஆா்பிஃப் உள்புகாா்கள் குழு மேற்கொண்ட விசாரணையில், கஜன் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையை ஏற்ற சிஆா்பிஎஃப் தலைமையகம், அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு அந்த அறிக்கையை அனுப்பியது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் கஜன் சிங்குக்கு பணி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்க அவருக்கு 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவரின் பதிலை பரிசீலித்த பின்னா், இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

கஜன் சிங் மீது இரண்டு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவற்றில் ஒன்றில் தற்போது அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சிஆா்பிஎஃப் படையின் முன்னாள் தலைமை விளையாட்டு அதிகாரியாக இருந்த கஜன் சிங், 1986-ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் நீச்சல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றாா். அதுவே ஆசிய விளையாட்டுப் போட்டியின் நீச்சல் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com