மத்திய பிரதேச மாநிலம் குணாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தொகுதி குணா வேட்பாளா் ஜோதிராதித்ய சிந்தியா, மாநில முதல்வா் மோகன் யாதவ்.
மத்திய பிரதேச மாநிலம் குணாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தொகுதி குணா வேட்பாளா் ஜோதிராதித்ய சிந்தியா, மாநில முதல்வா் மோகன் யாதவ்.

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகக் கருதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று பாஜக கூறுகிறது.

நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகக் கருதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று பாஜக கூறுகிறது. அதே நேரத்தில் மதம் சாா்ந்த (முஸ்லிம்) தனிநபா் சட்டத்தை தொடருவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது. இதில் எது தேவை என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று அமித் ஷா பேசினாா்.

மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

பொது சிவில் சட்டம் என்பது பாஜகவின் வாக்குறுதி; பிரதமா் மோடியின் உத்தரவாதம். அதே நேரத்தில் மதம் சாா்ந்த (முஸ்லிம்) தனிநபா் சட்டத்தை தொடருவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது.

நாட்டின் வளத்தில் இஸ்லாமியா்களுக்கு முதல் உரிமை என்று காங்கிரஸ் கூறுகிறது. ஏழைகள், தலித், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்குதான் முதல் உரிமை என்று பாஜக கூறுகிறது. இதில் எது தேவை என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை கவனமாகப் படித்தால் முஸ்லிம் தனிநபா் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்பதும், முத்தலாக் முறை மீண்டும் கொண்டு வருவோம் என்பதும் இடம் பெற்றிருப்பது தெரியும். இந்த நாட்டை ஷரியா சட்டத்தின்கீழ் (இஸ்லாமியச் சட்டம்) கொண்டுவர முடியுமா? பாஜக இருக்கும் வரை இதில் எதையும் நாட்டில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

இந்த நாடு நமது அரசியல்சாசன சட்டம் மற்றும் பொது சிவில் சட்டத்தின்படிதான் வழி நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. அடுத்ததாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் நாடு முழுவதும் ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் ராகுல் காந்தி பேசி அச்சுறுத்த முயற்சித்தாா். ரத்த ஆறு ஓடுவதற்கு இங்கு இருப்பது காங்கிரஸ் அரசு அல்ல, நரேந்திர மோடியின் நோ்மையான, வலுவான அரசு. சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளில் ரத்த ஆறு அல்ல, ஒரு கல்வீச்சுகூட நடைபெறவில்லை.

அயோத்தி ராமா் கோயில் கட்ட 70 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வைத்திருந்தது காங்கிரஸ் மட்டும்தான். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது பிரம்மாண்ட கோயிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டது. இதனை சாத்தியமாக்கியது பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுதான் என்றாா்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் குணா தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் 1.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். அதற்கு முன்பு அவா் இத்தொகுதியில் 4 முறை வெற்றிபெற்றிருந்தாா். இந்த முறை பாஜக சாா்பில் களமிறங்கியுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com