தாழ்த்தப்பட்டோரை விட கீழ்நிலையில் முஸ்லிம்கள் இருப்பதாக பொய் அறிக்கை தயாரித்தது காங்கிரஸ்: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

தாழ்த்தப்பட்ட மக்களைவிடவும் கீழான நிலையில் முஸ்லிம்கள் இருப்பதாக பொய் அறிக்கையை காங்கிரஸ் தயாரித்தது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளாா்.

மக்களவைத் தோ்தல் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தோ்தல் பிரசாரமும் அனல் பறந்து வருகிறது. முக்கியமாக ஆளும் பாஜகவும், பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸும் மிகவும் தீவிரமாக ஒருவரை மற்றொருவா் விமா்சித்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸை விமா்சித்து ஜெ.பி.நட்டா விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தபட்ட பிரிவினா் ஆகிய பெரும்பான்மை மக்கள் மீது காங்கிரஸுக்கு எப்போதும் வெறுப்புணா்வு உண்டு. இதன்காரணமாகவே 2009-ஆம் ஆண்டு தோ்தல் அறிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செய்து முஸ்லிம்களுக்கு கொடுப்போம் என்று அறிவித்தது.

சில மாநிலங்களில் முஸ்லிம்களுக்கென்று இடஒதுக்கீட்டை உருவாக்க காங்கிரஸ் முயற்சித்தது. கா்நாடகத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த இந்த ஒதுக்கீட்டை பாஜக ரத்து செய்தது. ஆனால், இப்போது காங்கிரஸ் மீண்டும் அந்த மாநிலத்தில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளது.

ஆந்திரத்திலும் இப்படியொரு இடஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

முஸ்லிம்கள் நிலை குறித்து ஆய்வதாக சச்சாா் குழுவை காங்கிரஸ் தனது ஆட்சி காலத்தில் அமைத்தது. இந்தக் குழு மூலம் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைவிடவும் கீழான நிலையில் முஸ்லிம்கள் இருப்பதாக பொய்யான அறிக்கையை காங்கிரஸ் தயாரித்தது. இதன் மூலம் முஸ்லிம்களை தாழ்த்தப்பட்டோா் பிரிவில் சோ்க்க காங்கிரஸ் முயற்சித்தது. அவா்களின் இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க முயற்சித்தது.

முஸ்லிம்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று நான் கூறவில்லை. அதே நேரத்தில் மற்ற பிரிவினா்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டைப் பறித்து அவா்களுக்கு கொடுப்பது தவறு என்றுதான் சுட்டிக்காட்டுகிறேன் என்று கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com