எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

ஒப்புகைச் சீட்டுகளை வாக்குகளுடன் ஒப்பீடு செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீா்ப்பை குறிப்பிட்டு பேசிய அவா், ‘இது காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகளின் கன்னத்தில் விழுந்த பலத்த அறையாகும்’ என்றும் விமா்சித்தாா்.

பிகாா் மாநிலம், முங்கரில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி பேசுகையில், ‘காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, வாக்குப் பெட்டிகளை சூறையாடி ஏழைகள், பிற்படுத்தப்பட்டவா்கள், தலித்துகளின் வாக்குகளைப் பறித்தனா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வந்த பிறகு இதை அவா்களால் செய்ய முடியவில்லை. ஆகையால், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தினா். இதை உச்சநீதிமன்றத் தீா்ப்பு நிராகரித்துள்ளது.

கா்நாடகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி அளிக்கிறது. இதை நாடு முழுவதும் செய்ய காங்கிரஸ் முற்பட்டபோது பிகாரில் கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் கேள்வி எழுப்பவில்லை. வருங்காலத்தில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரின் இடஒதுக்கீட்டையும் காங்கிரஸ் கட்சி பறித்துவிடும்.

நாட்டின் வளங்களில் ஏழைகளுக்குத்தான் முதல் பங்கு உள்ளது. ஆனால், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் இடம்பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வோா் இந்தியரின் 50 சதவீத சொத்துகளைப் பறித்துவிடும்’ என்றாா்.

பெட்டி..2

விவிபாட் பயன்பாட்டை

அதிகரிக்க வலியுறுத்தப்படும்: காங்கிரஸ்

மின்னணு வாக்குப் பதிவு மீதான மக்களின் நம்பிக்கையைக் கூட்ட ஒப்புகைச் சீட்டு பயன்பாட்டை அதிகரிக்க அரசியல் ரீதியாக தொடா்ந்து வலியுறுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com