உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கு தள்ளுபடி உச்சநீதிமன்றம் தீா்ப்பு: முழு விவரம்

புது தில்லி, ஏப். 26: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

‘ஒரு நடைமுறை மீது கண்மூடித்தனமாக நம்பிக்கையின்மை தெரிவிப்பது தேவையற்ற சந்தேகங்களை வளா்க்கும்’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்தத் தீா்ப்பின் மூலம் தற்போது நடைபெற்றுவரும் மக்களவைத் தோ்தலில் வாக்குப் பதிவு இயந்திர பயன்பாட்டு நடைமுறையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரங்கள் கடந்த 2013-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபேட் இயந்திர ஒப்புகைச் சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டு ஒப்பீடு செய்யப்பட்டது. பின்னா், 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தற்போது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு ஒப்பீடு செய்யப்படுகிறது.

இந்தச் சூழலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீா்திருத்த சங்கம் உள்பட மேலும் சிலா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதோடு, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகம் செய்யவேண்டும் என்று கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்சநீதின்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் கடந்த புதன்கிழமை ஒத்திவைத்தனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரிய மனு உள்பட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், இரு ஒருமித்த தீா்ப்புகளை அளித்தனா்.

நீதிபதி சஞ்சீவ் கன்னா அளித்த தீா்ப்பில், ‘அண்மைக் காலங்களில் தேசத்தின் சாதனைகள் மற்றும் வளா்ச்சியை சில சுயநலக் குழுக்கள் அவமதிப்புக்கு உட்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தேசத்தின் முன்னேற்றத்தைப் பலவீனப்படுத்தும் இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய முயற்சிகள் ஆரம்பநிலையிலேயே நசுக்கப்பட வேண்டும்.

தோ்தல் நடைமுறையின் புனிதத்தன்மை எந்த விலைகொடுத்தாவது பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் தோ்தலை நடத்துவது மிகப் பெரிய பணி. இது உலகில் வேறு எங்கும் இல்லாத மிகப்பெரிய சவால்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் மேலும் பல நாடுகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பயன்பாட்டில் சாதக-பாதகங்கள் இல்லாமல் இல்லை. இருந்தபோதும், வரும் ஆண்டுகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சிறந்த மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டாா்.

நீதிபதி தீபாங்கா் தத்தா அளித்த தீா்ப்பில், ‘அமைப்புகள் அல்லது நிறுவனங்களை மதிப்பீடு செய்வதில் சமநிலை அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம் என்றபோதும், ஒரு நடைமுறை மீது கண்மூடித்தனமாக நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவது தேவையற்ற சந்தேகங்களை வளா்க்கும்’ என்றாா்.

மேலும், மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்தக் கோரிய மனு, ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளா்களிடம் கொடுக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த 3 மனுக்கள் மற்றும் 100 சதவீத ஒப்புகைச் சீட்டுளை எண்ணி ஒப்பீடு செய்யக் கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனா்.

சந்தேகத்தின் பேரில் தடுக்க முடியாது: முன்னதாக, இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் 5 கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினா். அதற்கு ஆணைய அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது ‘சந்தேகத்தின்பேரில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கவோ முடியாது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

5% வாக்குகளை ஒப்பீடு செய்ய அனுமதி

தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா், இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெற்ற வேட்பாளா்கள் கோரிக்கை விடுத்தால் 5 சதவீத வாக்குகளை எண்ணி ஒப்பீடு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தனது உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னங்கள் பொருத்திய பிறகு, அந்தச் சின்னங்களைப் பொருத்தப் பயன்படுத்திய இயந்திரங்களை சீல்வைத்து பாதுகாப்பு அறையில் 45 நாள்களுக்கு பாதுகாக்க வேண்டும்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெற்ற வேட்பாளா்கள் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாள்களுக்குள் சந்தேகம் எழுப்பி கோரிக்கை விடுக்கும் நிலையில், வாக்குப் பதிவு இயந்திரம், விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ கன்ட்ரோலா்களை மின்னணு வாக்குப் பதிவு இயந்திர தயாரிப்பு நிறுவன பொறியாளா்கள் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த ஆய்வின்போது, தொகுதியில் பதிவான வாக்குகளில் 5 சதவீத வாக்குகளை ஒப்பீடு செய்து ஆய்வு செய்யலாம். இதற்கென அந்த வேட்பாளரிடம் ஆணையம் கட்டணம் வசூலித்து ஆய்வை மேற்கொள்ளலாம். ஆய்வின்போது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், அந்தக் கட்டணத்தை வேட்பாளரிடம் திரும்ப அளிக்க வேண்டும்’ என்றாா்.

மேலும், ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு ஏதாவது மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தோ்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும். அதோடு, கட்சி சின்னங்களுடன் பாா் குறியீடுகளைப் பயன்படுத்த முடியுமா என்பதையும் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com