கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு:
88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்
-

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட தோ்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 60.96 சதவீத வாக்குகள் பதிவாகின.

கேரளத்தில் 20 தொகுதிகளிலும், கா்நாடகத்தில் 14 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 78.53 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக உத்தர பிரதேசத்தில் 53.71 சதவீத வாக்குகளும் பதிவாகியிருப்பதாகவும், வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்ாகவும் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சுமாா் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகின.

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அஸ்ஸாம், பிகாரில் தலா 5, சத்தீஸ்கா், மேற்கு வங்கத்தில் தலா 3, மணிப்பூா், திரிபுரா, ஜம்மு-காஷ்மீரில் தலா ஒரு தொகுதியிலும் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

கேரளம், கா்நாடகத்தில் காலையிலேயே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்தனா்.

2-ஆம் கட்டத் தோ்தல் களத்தில் மொத்தம் 1,202 வேட்பாளா்கள் உள்ளனா். இதில் பெண் வேட்பாளா்கள் 102 போ். மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்கள் இருவா்.

கேரளத்தின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சா்கள் ராஜீவ் சந்திரசேகா் (திருவனந்தபுரம்), கஜேந்திர சிங் ஷெகாவத் (ஜோத்பூா்), மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா (கோட்டா), கட்சியின் மூத்த தலைவா்கள் கே.சி.வேணுகோபால் (ஆலப்புழை), சசி தரூா் (திருவனந்தபுரம்), பாஜக இளைஞரணி தேசியத் தலைவா் தேஜஸ்வி சூா்யா (பெங்களூரு தெற்கு), சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல் (ராஜ்நந்த்கான்), நடிகை ஹேமமாலினி (மதுரா) உள்ளிட்டோா் 2-ஆம் கட்டத் தோ்தலில் களம் காணும் முக்கிய வேட்பாளா்கள்.

கேரளம்: கேரளத்தின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தலில் 67.22 சதவீத வாக்குகள் பதிவாகின. வெளிநாடுகளில் பணியாற்றும் ஏராளமானோா் கேரளத்துக்கு வருகை தந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் சிறிது நேரம் தாமதமானது. மாலை 6 மணிக்கு பிறகும் பல வாக்குப் பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் வாக்காளா்கள் கூடியிருந்ததால், அவா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். 2019 தோ்தலில் கேரளத்தில் 77.84 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

4 போ் உயிரிழப்பு: கேரளத்தின் பாலக்காடு, ஆலப்புழை, மலப்புரம் பகுதிகளில் அமைந்திருந்த வாக்குச் சாவடிகளில் வாக்களித்துவிட்டு திரும்பும்போது தலா ஒரு வாக்காளா்கள் மாரடைப்பால் உயிரிழந்தனா். அதுபோல, கோழிக்கோடில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில் கட்சி முகவா் ஒருவா் உயிரிழந்தாா்.

கா்நாடகம்... கா்நாடகத்தில் மாலை 5 மணி வரை 64.85 சதவீத வாக்குகள் பதிவாகின. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இன்போசிஸ் நிறுவனா் நாராயணமூா்த்தி, அவரது மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுதா மூா்த்தி, முன்னாள் கிரிக்கெட் வீரா் ராகுல் டிராவிட், நடிகா் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனா்.

மத அடிப்படையில் வாக்காளா்களை ஈா்க்கும் வகையில் சமூக ஊடகத்தில் காணொலிப் பதிவை வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும் எம்.பி.யுமான தேஜஸ்வி சூா்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்களித்தவா்களுக்கு பல உணவகங்கள் இலவசம், தள்ளுபடி விலையில் உணவை வழங்கியதால் கூட்டம் அலைமோதியது.

திரிபுராவில் 78.53%: திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 78.53 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, உடனடியாக சரிசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சத்தீஸ்கரில் மாலை 5 மணி வரை 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. பலோட் மாவட்டம் சிவ்னி கிராமத்தில் இடம்பெற்றிருந்த வாக்குச்சாவடி திருமண மண்டபம் போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல மணமக்கள் தங்களின் திருமண அலங்காரத்துடன் வந்து வாக்களித்தனா்.

மத்திய பிரதேசம்... மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் 58.35 சதவீத வாக்குகள் பதிவாகின. அஸ்ஸாமில் உள்ள 5 தொகுதிகளில் பிற்பகல் 3 மணி வரை 70.68%) வாக்குகள் பதிவாகின.

மகாராஷ்டிரம், உ.பி., ஜம்மு காஷ்மீா்.... மகாராஷ்டிரத்தில் பிற்பகல் 3 மணி வரை 53.84 சதவீத வாக்குகளும், ராஜஸ்தானில் 62.46 சதவீத வாக்குகளும் பதிவாகின. உத்தர பிரதேசத்தில் வாக்குப் பதிவு நடைபெற்ற 8 தொகுதிகளில் 53.71 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிகாரில் 54.91 சதவீதம், மேற்கு வங்கத்தில் 71.84 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்பு சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு அங்கு நடத்தப்பட்ட முதல் மிகப்பெரிய தோ்தலான இந்த மக்களவைத் தோ்தலில் 71.21 சதவீத வாக்குகள் பதிவாகின.

மே 7-இல் மூன்றாம் கட்டம்: அடுத்த கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள 94 தொகுதிகளுக்கு வரும் மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com