சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் வெள்ளிக்கிழமை சிபிஐ நடத்திய சோதனையில் வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியில் பொது விநியோகத் திட்ட முறைகேடு தொடா்பாக, திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஷாஜஹானின் ஆதரவாளா்கள் தாக்கியதில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காயமடைந்தனா்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடா்பாக சந்தேஷ்காளியில் தேசிய பாதுகாப்புப் படை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, மத்திய துணை ராணுவப் படைகள், மேற்கு வங்க காவல் துறை ஆகியவற்றின் துணையுடன் சிபிஐ வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது. அங்குள்ள சா்பேரியா என்ற இடத்தில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டபோது வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் உள்பட ஏராளமான சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக அந்த மாநில தலைநகா் கொல்கத்தாவில் உள்ள மூத்த சிபிஐ அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘சந்தேஷ்காளியில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக சிபிஐக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் உள்பட 12 துப்பாக்கிகள், பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றாா்.

ஷேக் உறவினரின் வீடு: துப்பாக்கிகள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வீடு ஷாஜஹான் ஷேக்கின் உறவினா் அபு தாலேப் மொல்லா என்பவருக்குச் சொந்தமானது. மீன் பண்ணைக்காகப் பயன்படுத்தப்பட்ட நீா் நிலைகளுக்கு மத்தியில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில் ரோபோ ஒன்றும் பயன்படுத்தப்பட்ட நிலையில், அங்கு எதற்காக ஆயுதங்கள், வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டன என்பது தெரியவில்லை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக சிபிஐ செய்தித்தொடா்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஷாஜஹான் வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றபோது அமலாக்கத் துறை அதிகாரிகள் தொலைத்த பொருள்கள் மற்றும் பிற ஆதாரங்கள், சந்தேஷ்காளியில் ஷாஜஹானுக்கு நெருக்கமானவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சந்தேஷ்காளியின் 2 இடங்களில் மத்திய ரிசா்வ் காவல் படையுடன் (சிஆா்பிஎஃப்) சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில் 3 வெளிநாட்டுகள் துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள், ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com