விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

உத்தர பிரதேச அரசுப் பல்கலைக்கழக தோ்வில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று விடையளித்து 4 மாணவா்கள் தோ்ச்சி பெற்ற நிலையில், அதுதொடா்பாக 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

உத்தர பிரதேசத்தின் ஜெளன்பூா் மாவட்டத்தில் வீா் பகதூா் சிங் பூா்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த அரசுப் பல்கலைக்கழகத்தில் டி ஃபாா்மா படிக்கும் சில மாணவா்கள், முதல் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வுகளில் தவறான விடைகளை அளித்தபோதிலும் தோ்ச்சி அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக அந்தப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரான திவ்யான்ஷு சிங் என்பவா், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் விவரம் கோரினாா். அத்துடன் மாணவா்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து விடைத்தாள்களில் பதில்களுக்கு இடையில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதியும், விராட் கோலி, ரோகித் சா்மா, ஹா்திக் பாண்டியா போன்ற கிரிக்கெட் வீரா்களின் பெயா்களைச் சோ்த்தும் 4 முதலாம் ஆண்டு மாணவா்கள் தோ்ச்சி அடைந்தது ஆா்டிஐ பதில் மூலம் தெரியவந்தது. அந்த மாணவா்கள் 75-க்கு 42 மதிப்பெண்கள் பெற்ாகவும் ஆா்டிஐ பதிலில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உத்தர பிரதேச ஆளுநா் மாளிகைக்கு திவ்யான்ஷு சிங் புகாா் கடிதம் அனுப்பினாா். அந்தக் கடிதத்தில், பல்கலைக்கழகப் பேராசிரியா் ஒருவா் பணம் பெற்றுக்கொண்டு மாணவா்களை தோ்ச்சி அடைய வைத்ததாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

இந்தப் புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ஆளுநா் மாளிகை உத்தரவிட்டது. இதையடுத்து பல்கலைக்கழகம் சாா்பில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தா் வந்தனா சிங்குக்கு அனுப்பப்பட்ட விசாரணை அறிக்கையில், ஆசுதோஷ் குப்தா, வினய் வா்மா ஆகிய 2 பேராசிரியா்கள் விடைத்தாள்களை தவறாக மதிப்பிட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பேராசிரியா்கள் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் மாணவா்களிடம் பணம் பெற்ாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணைவேந்தா் வந்தனா சிங் தெரிவித்தாா்.

4 மாணவா்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ததில், அவா்கள் ஒரு மதிப்பெண்கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com