நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

”தேர்தலையும் அதிகாரத்தையும் பற்றி மட்டுமே பிரதமருக்கு கவலை” -பிரியங்கா காந்தி
நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி
படம் | காங்கிரஸ் எக்ஸ் தளப் பதிவு

காங்கிரஸ் ஆட்சியில், நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய, 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ போல 100 நாள்கள் வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி தெற்கு குஜராத்தில் முதல்முறையாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி. வல்சாத்தில் இன்று (ஏப்.27) பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியால் போர்களை தடுத்து நிறுத்த முடியுமென பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். அப்படியிருக்கும் போது, அவரால் ஏன் வறுமையை ஒழித்துக் கட்ட முடியாது?

மோடி ஜி, நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று மக்கள் கேட்கிறார்கள். ஆனால், அதற்கு அவர் முட்டாள்தனமாகப் பேசுகிறார். நீங்கள் அணிந்துள்ள தாலியையும் நகைகளையும் பறித்து(காங்கிரஸ் ஆட்சியமைத்தால்) , வேறு சிலருக்கு(முஸ்லிம்களுக்கு) அவை அளிக்கப்படும் என பேசி வருகிறார் பெரியவர் (பிரதமர் மோடி). இவற்றையெல்லம் கேட்டுவிட்டு நீங்கள் சிரிக்கத்தான் முடியும்.

தனது பதவியின் முக்கியத்துவததை உணராமல், நாட்டின் பிரதமர் இதுபோன்ற முட்டாள்தனமானவற்றை இப்போது மக்களுடன் பேசிவருகிறார். இத்தனை பொய்களை கூறும் நாட்டின் முதல் பிரதமர் இவர்தான்.

நாட்டின் விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி வந்தனர், ஆனால் அவர்களின் பிரச்சனைகளை கேட்க கூட பிரதமர் அக்கறை காட்டவில்லை. தேர்தலையும் அதிகாரத்தையும் பற்றி மட்டுமே அவருக்கு கவலை. தனது கோடீஸ்வர நண்பர்களைப் பற்றி கவலைப்படும் அவர், நாட்டின் சொத்துக்களைக் கூட அவர்களுக்கு வழங்கியுள்ளார்.

ஹிந்துக்கள் - முஸ்லிம்கள்(பிரிவினை) பற்றி பேசிக் கொண்டு, தங்களை உலகின் தலைசிறந்த தலைவர்களென அவர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள். இதுபோன்ற மாபெரும் தலைவர்கள் உங்களுக்கு வீடு, தண்ணீரி, வேலைவாய்ப்பு அகியவற்றை வழங்க முடியாதெனில், அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.மக்களை குறித்த கவலை பிரதமருக்கு இருக்கிறதா?

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ​​ஊடகங்கள் தினமும் கேள்விகளைக் கேட்டன. அப்போது அவர்களை யாரும் தடுக்க முயலவில்லை. ஆனால் இன்று ஒட்டுமொத்த ஊடகங்களும் விற்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் பெரிய கோடீஸ்வரர்களால் நடத்தப்படுகின்றன, ஆகவே அவற்றின் மூலமாக நீங்கள் உண்மை செய்திகளை எதிர்பார்க்கமுடியாது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவது உண்மையல்ல. பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய கள யதார்த்த பிரச்னைகளால், மோசமான நிலையில் மக்கள் இருக்கின்றனர். பழங்குடியின சமூகம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகிறது. உங்கள் பிரச்னைகளை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை.

10 ஆண்டுகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எந்தப் பணியையும் பாஜக அரசு செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வரும் அநீதியும் ஒடுக்குமுறையும், மக்களின் வாழ்க்கையை கடும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், அநீதியையும், சர்வாதிகாரத்தையும் வேரோடு களைய காங்கிரஸ் ஆட்சிக்கு வரவிருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com