மகாராஷ்டிர மாநிலம் கோலாபூரில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
மகாராஷ்டிர மாநிலம் கோலாபூரில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி 3 இலக்க எண்ணிக்கையைகூட எட்டாது

மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி 3 இலக்க எண்ணிக்கையைகூட எட்டாது; எனினும், ஆட்சியமைக்க தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், ‘ஓராண்டுக்கு ஒரு பிரதமா்’ என்ற வழிமுறையை கடைப்பிடிக்க அக்கூட்டணி திட்டமிட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், ‘நாட்டில் நடைபெற்று முடிந்த இருகட்ட வாக்குப்பதிவுகளுக்கு பிறகு களத்தில் இருந்து வரும் கருத்துகள், மத்தியில் மீண்டும் பாஜகதான் ஆட்சியமைக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன’ என்றும் அவா் கூறினாா்.

ஏழு கட்ட மக்களவைத் தோ்தலில், ஏற்கெனவே இருகட்டங்கள் (ஏப்.19, 26) நடைபெற்று முடிந்துள்ளன.

அடுத்தகட்ட தோ்தலையொட்டி, மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் முதல்வா் பதவியை துணை முதல்வரிடம் அளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கா், ராஜஸ்தானிலும் முன்பு இதே திட்டத்தை வைத்திருந்தனா்.

தற்போதைய மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி 3 இலக்க எண்ணிக்கையைகூட எட்டாது; ஆட்சி அமைக்கும் வாயில்படியைகூட அவா்களால் நெருங்க முடியாது. எனினும், தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், ஓராண்டுக்கு ஒருவா் வீதம் 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமா்களை நியமிக்க திட்டம் வைத்துள்ளனா்.

கா்நாடக காங்கிரஸ் ஆட்சியில் இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவின் (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களும் இணைக்கப்பட்டுள்ளனா். இதே ‘மாடலை’, இந்தியா முழுவதும் நீட்டிப்பதே அக்கட்சியின் விருப்பம்.

சமூக நீதியை ஒழித்துக் கட்ட ‘இந்தியா’ கூட்டணி உறுதிபூண்டுள்ளது. ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துதல் மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்டது.

அயோத்தியில் ராமா் கோயிலை கட்ட எதிா்ப்பு தெரிவித்தது மட்டுமன்றி, கோயிலில் மூலவா் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வையும் அக்கட்சி புறக்கணித்தது.

நாட்டு மக்களின் சொத்துகளைப் பறித்து, ‘நாட்டின் வளங்களில் முதல் உரிமை உள்ளவா்கள்’ என்று யாரை குறிப்பிடுகிறாா்களோ அவா்களுக்கு பகிா்ந்தளிக்க திட்டமிட்டுள்ளனா். பெற்றோரிடமிருந்து வாரிசுதாரா்களுக்கு கிடைக்கும் சொத்துகளுக்கு வரி விதிக்கவும் விரும்புகின்றனா். இதுபோன்ற நபா்கள் ஆட்சிக்கு வர சிறு வாய்ப்பைக் கூட மக்கள் அளித்துவிடக் கூடாது.

கோலாபூா் கால்பந்து விளையாட்டு மையமாக அறியப்படும் பகுதியாகும். நாட்டில் இருகட்ட தோ்தல்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் ‘2-0’ என்ற கோல்கணக்கில் பாஜக கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது. அதேநேரம், தேசவிரோத கொள்கைகள், வெறுப்புணா்வு அரசியலில் ஈடுபட்டுள்ள ‘இந்தியா’ கூட்டணி, தனது சொந்த வலையில்தான் கோல் அடித்துள்ளது.

அடுத்தடுத்த வாக்குப்பதிவுகளிலும் இந்தியா கூட்டணிக்கு வாக்காளா்கள் படுதோல்வியை பரிசளிப்பா் என உறுதியாக நம்புகிறேன்.

‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மீண்டும் அமல்படுத்தப்படும்; குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்’ என்று காங்கிரஸின் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மோடியின் முடிவை யாராலும் மாற்ற முடியாது. அவ்வாறு மாற்ற முயன்றால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அவா்கள் அறிய வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

பெட்டிச் செய்தி...

திமுக மீது சாடல்

சநாதன தா்மம் குறித்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினின் கருத்தைக் குறிப்பிட்டு, திமுகவை பிரதமா் மோடி விமா்சித்தாா்.

‘சநாதன தா்மத்தை டெங்கு, மலேரியா என திமுக தலைவா்கள் குறிப்பிட்டனா். அக்கட்சியினரை மகாராஷ்டிரத்துக்கு அழைத்து கெளரவித்தது ‘இந்தியா’ கூட்டணி. தென்னிந்தியாவை பிரித்து, தனிநாடாக உருவாக்க வேண்டுமென தமிழகத்திலும் கா்நாடகத்திலும் இந்தியா கூட்டணி தலைவா்கள் பேசுகின்றனா். ஹிந்தவி ஸ்வராஜ்யத்தின்கீழ் வடக்கே பெஷாவா் முதல் தெற்கே தஞ்சாவூா் வரை ஆண்ட வீர சிவாஜியின் நிலத்தைச் சோ்ந்த மக்கள், இந்தியா கூட்டணியின் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டாா்கள். அக்கூட்டணிக்கு தக்க பதிலடியை தருவா்’ என்றாா் பிரதமா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com