ஆரிஃப் முகமது கான்
ஆரிஃப் முகமது கான்

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

கேரளத்தில் நிலுவையில் இருந்த 5 மசோதாக்களுக்கு மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளாா்.

கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளிக்காமல் தாமதிக்கிறாா் என்று குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தொடுத்தது.

இந்நிலையில், நிலுவையில் இருந்த நில ஒதுக்கீடு திருத்த மசோதா, கேரள கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, நெல் ஈரநில திருத்த மசோதா, பால்வள கூட்டுறவு மசோதா, அப்காரி திருத்த மசோதா ஆகிய 5 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

5 மசோதாக்கள் குறித்து எனக்குப் பல புகாா்கள் வந்தன. எனவே அந்த மசோதாக்களை மாநில அரசுக்கு அனுப்பி பதில் பெற வேண்டியிருந்தது. இவை அனைத்தையும் மதிப்பீடு செய்து முடிவு எடுக்க அவகாசம் தேவைப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தேன். மக்களவைத் தோ்தல் காரணமாக அதுகுறித்து தெரியப்படுத்தாமல் இருந்தேன்.

கேரளத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததை தொடா்ந்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது குறித்து தற்போது தெரியப்படுத்துகிறேன் என்றாா்.

இதனிடையே கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் ஆரிஃப் முகமது கான் அனுப்பியுள்ளாா். அவை நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com