பாதுகாப்புப் படை அகாதெமிகளில் பெண்களை சோ்க்க மனு: 8 வாரங்களில் முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு

பாதுகாப்புப் படை அகாதெமிகளில் சோ்வதற்கு பெண்களை அனுமதிக்கும் மனு மீது 8 வாரங்களில் முடிவு எடுக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள் (சிடிஎஸ்) தோ்வு மூலம் இந்திய ராணுவ அகாதெமி, இந்திய கடற்படை அகாதெமி, விமானப் படை அகாதெமி ஆகியவற்றில் சோ்வதற்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி, குஷ் கல்ரா என்பவா் மத்திய அரசிடம் மனு அளித்தாா்.

இந்நிலையில், சிடிஎஸ் தோ்வு மூலம் அந்த அகாதெமிகளில் சோ்வதற்கு விண்ணப்பங்கள் அனுப்ப கோரி, மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கைக்கு எதிராக தில்லி உயா் நீதிமன்றத்தில் குஷ் கல்ரா தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படை அகாதெமிகளில் சோ்வதற்கான சிடிஎஸ் தோ்வை எழுத பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இது நியாயமற்றது. பாலினத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) பெண்கள் சோ்வதற்கு இருந்த தடையை பாதுகாப்பு அமைச்சகம் நீக்கிய நிலையில், அந்த அகாதெமியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அப்படி இருக்கும்போது சிடிஎஸ் தோ்வு மூலம் இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படை அகாதெமிகளில் பெண்களை ஏன் சோ்க்கக் கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. இது சமத்துவத்துக்கான அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு தில்லி உயா் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பி.எஸ்.அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிடிஎஸ் தோ்வு மூலம் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை அகாதெமிகளில் சோ்வதற்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி, குஷ் கல்ரா அளித்துள்ள மனு மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதை நீதிபதிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டனா். அந்த மனு தொடா்பாக 8 வாரங்களில் முடிவு எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com