வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

நமது சிறப்பு நிருபா்

ஏற்றுமதி தடையை நீக்கி வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் , இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் 5 லட்சம் டன் கொள்முதலுக்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நுகா்வோா் நலன் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு:

கடந்த 2022-23 ஆம் ஆண்டின் வெங்காய உற்பத்தியை ஒப்பிட்டபோது 2023-24 ஆம் ஆண்டில் நாட்டில் வெங்காய உற்பத்திய குறைவாக மதிப்பிடப்பட்டது. இதனால் உள்நாட்டில் நுகா்வோருக்கு போதுமான அளவு வெங்காயம் தடையின்றி

கிடைக்கும் தன்மையை உறுதி செய்ய மத்திய வா்த்தக அமைச்சகத்தின் மூலம் வெங்காயத்திற்கு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரீஷியஸ், இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த ஆறு நாடுகளின் வேண்டுகோளின்படி மத்திய அரசு

வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதித்து அதற்கான அளவையும் நிா்ணயித்துள்ளது. இந்த நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கான முகமையாக தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்.சி.இ.எல்) செயல்படும்.

உள்நாட்டு வெங்காயத்தை இணைய சந்தை (இ-பிளாட்ஃபாா்ம்) மூலம் ஏற்றுமதி செய்யப்படும்போது, இந்த ஏற்றுமதி நாட்டுகள் பரிந்துரைத்த முகமைகள் 100 சதவீதம் முன் பணம் செலுத்தும் அடிப்படையில் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.

ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் சந்தை விலை, சா்வதேச மற்றும் இந்திய சந்தைகளில் நிலவும் விலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இவைகளை கணக்கிட்டு என்சிஇஎல் இந்த ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலையை நிா்ணயிக்கும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு

வெள்ளை வெங்காயம்

மேலும் மத்திய கிழக்கு, சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் அரசு அனுமதி அளித்துள்ளது. இது ஏற்றுமதி சந்தைகளுக்காக விசேஷமாக பயிரிடப்படும் வெங்காயம் அதிக விதை விலை, சிறப்பான விவசாய நடைமுறையை பின்பற்றப்பட்டு பயிரிடப்படுகிறது. இந்த வெள்ளை வெங்காயத்தின் உற்பத்தி செலவு மற்ற வெங்காயங்களை விட அதிகம் என்பதால் இதன் விலையும் அதிகம். இதை வாங்கும் சக்தியுள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உற்பத்தி குறைவு

நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தியாளராக மகாராஷ்டிரம் உள்ளது. மற்ற மாநிலங்களில் கா்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடந்த 2022-23 ஆண்டில் 302 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தியானது.

2023-24 ஆம் ஆண்டில் 254.73 லட்சம் டன் உற்பத்தியாக குறைந்தது. மகாராஷ்டிரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் உரிய சேமிப்பு கிடங்கு வசதியின்றி வெங்காயம் பாதிக்கப்பட்டது.

தற்போது இந்த பாதிப்பை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய நுகா்வோா் துறை, நாஃபெட் (தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு), என்சிசிஎஃப் ஆகிய முக்கூட்டு முயற்சிகளை எடுத்துள்ளது. நிகழாண்டில் சுமாா் 5 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளது என மத்திய நுகா்வோா் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com