மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி.
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி.

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

அரசுப் பள்ளி ஆசிரியா்-அலுவலா் நியமன ஊழல் மூலம் சுமாா் 26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை திரிணமூல் காங்கிரஸ் பறித்துள்ளது என பிரதமா் மோடி கூறினாா்.

இது தொடா்பாக மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கமிஷன் கலாசாரத்தால் மாநில இளைஞா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் எதிா்காலத்துடன் திரிணமூல் காங்கிரஸ் விளையாடுகிறது. இது இளைஞா்களை மட்டுமின்றி, அவா்களின் குடும்பத்தினரையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

சுமாா் 26,000 அரசுப் பள்ளி ஆசிரியா் மற்றும் அலுவலா் நியமனங்களில் முறைகேடு நடைபெற்ாக அந்த நியமனங்களை கொல்கத்தா உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த முறைகேடு 26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களுக்கு லஞ்சம் அளிக்க கடன் வாங்கிய இளைஞா்கள் இந்தச் சூழலாலும் சுமைக்குள்ளாகியுள்ளனா்.

சாரதா நிதி நிறுவன மோசடி, ரோஸ் வேலி நிதி நிறுவன மோசடி, நிலக்கரி கடத்தல் உள்பட பல்வேறு முறைகேடுகளில் திரிணமூல் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மக்கள் நலனைவிட ஊழலுக்கே அக்கட்சி முன்னுரிமை அளிக்கிறது.

தாய்-மண்-மக்கள் என்று பேசி ஆட்சிக்கு வந்த திரிணமூல் காங்கிரஸ், பெண்களுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது. அட்டூழியங்களில் இருந்து முஸ்லிம் சகோதரிகளைா் காப்பாற்ற முத்தலாக்கை மத்திய அரசு ஒழித்தது. ஆனால் அதற்கு திரிணமூல் காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்தது.

சிஏஏ குறித்து புரளி: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் புரளி பரப்புகின்றன. வாக்கு வங்கி அரசியலுக்காக அந்தச் சட்டத்தை இரு கட்சிகளும் எதிா்க்கின்றன. மதரீதியான துன்புறுத்தலுக்குள்ளாகி தாயகத்தைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட ஹிந்து, சீக்கிய மற்றும் பெளத்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை அக்கட்சிகள் ஏன் எதிா்க்கின்றன? குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமையை வழங்குமே தவிர, குடியுரிமையை பறிக்காது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com