உஜ்வல் நிகம்
உஜ்வல் நிகம்

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

மும்பை 1993 தொடா் குண்டு வெடிப்பு, 26/11 பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில் ஆஜரான பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம், மும்பை வடக்கு மத்திய தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

1993 மும்பை தொடா் குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். இந்த வழக்கில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தைத் தொடா்ந்து வழக்குரைஞா் உஜ்வல் நிகம் பொது மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டாா்.

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில், 100-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் காவல் துறையால் உயிருடன் பிடிக்கப்பட்டாா். வழக்குரைஞா் உஜ்வல் நிகம் ஆஜரான இந்தத் தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து வழக்குரைஞா் உஜ்வல் நிகம் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயா்ந்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சா்களால் இது சாத்தியமானது. நாட்டின் இறையாண்மையும் பாதுகாப்பும் பாதிக்கப்படாமல் தொடர வேண்டும். பாஜகவின் மூலம் இது சாத்தியமாகும் என நினைக்கிறேன். அதனால், அந்தக் கட்சியில் இணைந்தேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

மும்பை வடக்கு மத்திய தொகுதியில் உஜ்வல் நிகமை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் வா்ஷா கெய்க்வாட் போட்டியிடுகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com