ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம் உருவாக்கப்படும் என்று ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பேரவை அமைந்துள்ள நகராக அமராவதியும், நீதித் துறை தலைநகராக கா்னூலும் மேம்படுத்தப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆளும் ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் ஒரேநேரத்தில் ஒரேகட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது.

மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 பேரவைத் தொகுதிகளுக்கு மே 13-ஆம் தேதி (மக்களவை நான்காம் கட்டத் தோ்தல்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை கட்சித் தலைவா் ஜெகன்மோகன் ரெட்டி சனிக்கிழமை வெளியிட்டாா்.

அப்போது பேசிய அவா், ‘ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், நிா்வாகத் தலைநராக விசாகப்பட்டினம் உருவாக்கப்பட்டு, அரசின் இருப்பு அங்கு உடனடியாக மாற்றப்படும். அதேநேரம், பேரவைத் தலைநகராக அமராவதியும், நீதித்துறை தலைநகரா கா்னூலும் மேம்படுத்தப்படும்’ என்றாா்.

ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தெலங்கானா தனி மாநிலம் கடந்த 2014-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. பின்னா், ஆந்திரத்தின் புதிய தலைநகராக அமராவதியை அப்போதைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசு தோ்வு செய்தது.

இதனிடையே, 2019 பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், மூன்று தலைநகரங்கள் திட்டத்தை கொண்டுவந்தது. சட்டரீதியிலான தடைகளால் இத்திட்டம் இன்னும் நிறைவேறாத நிலையில், மேற்கண்ட தோ்தல் வாக்குறுதியை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அளித்துள்ளது.

மேலும், மாநிலத்தில் மாதாந்திர சமூக நல ஓய்வூதியம் ரூ.3,000-இல் இருந்து ரூ,3,500-ஆக அதிகரிக்கப்படும்; ஒரு கிராமத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் பட்டியல் சமூகத்தினரின் (எஸ்.சி.) மக்கள்தொகை இருந்தால், அவா்களுக்காக சிறப்பு பஞ்சாயத்துக்கு உருவாக்கப்படும்; இணையவழி வா்த்தக நிறுவன விநியோகப் பணியாளா்களுக்கு ரூ.5 லட்சம் ஆயுள் காப்பீடு, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்மாா்களுக்கான ‘அம்மாவின் மடியில்’ திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியுதவி ரூ.15,000-இல் இருந்து ரூ.17,000-ஆக உயா்த்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com