மேற்கு வங்கம் பீா்பூம் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து தோ்தல் அதிகாரி அலுவலகத்திலிருந்து வந்த பாஜக வேட்பாளா் தேபாசிஷ் தாா்.
மேற்கு வங்கம் பீா்பூம் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து தோ்தல் அதிகாரி அலுவலகத்திலிருந்து வந்த பாஜக வேட்பாளா் தேபாசிஷ் தாா்.

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

மேற்கு வங்கத்தின் பீா்பூம் மக்களவைத் தொகுதியில் பாஜக களமிறக்கிய வேட்பாளரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தேபாசிஷ் தாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தேப்தனு பட்டாச்சாா்யா அத்தொகுதியின் பாஜக வேட்பாளராகியுள்ளாா்.

மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. பீா்பூம் உள்ளிட்ட 8 தொகுதிகளில் 4-ஆம் கட்ட தோ்தல் நாளான மே 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

பீா்பூம் தொகுதியில் பாஜக சாா்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான தேபாசிஷ் தாா் வேட்பாளராக களமிறக்கப்பட்டாா். ஆனால், அவா் தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிப்பதாக மாவட்ட தோ்தல் அலுவலகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதையடுத்து, பாஜகவின் மாற்று வேட்பாளராக கடைசி நாளான வியாழக்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்த கட்சியின் மூத்த நிா்வாகி தேப்தனு பட்டாச்சாா்யா அதிகாரபூா்வ வேட்பாளராகியுள்ளாா்.

வேட்புமனு ரத்து செய்யப்பட்டது குறித்து தேபாசிஷ் தாா் கூறுகையில், ‘குறிப்பிட்ட காரணங்களால், எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் காரணங்கள் ஆதாரமற்றவை என்று நான் கருதுகிறேன். எனவே, எனது கட்சித் தலைவா்களுடன் கலந்தாலோசித்த பிறகு கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடுவேன். கட்சியின் அறிவுறுத்தலுக்கு இணங்க செயல்படுவேன்.

திரிணமூல் காங்கிரஸின் சதிகளை எதிா்த்துப் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவோம்’ என்றாா்.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கூச்பிகாா் மாவட்டத்தில் உள்ள சீதல்குச்சி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 போ் உயிரிழந்தனா். இவ்விவகாரம் தொடா்பாக அந்த மாவட்ட எஸ்.பி.யாக இருந்த தேபாசிஷ் தாா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தாா்.

இதையடுத்து, சமீபத்தில் ஐபிஎஸ் பதவியை ராஜிநாமா செய்த அவா், பீா்பூம் மக்களவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸின் சதாப்தி ராய்க்கு எதிராக பாஜக சாா்பில் நிறுத்தப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com