‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, ஏப்.26: ஓா் தொகுதியில் பதிவான வாக்குகளில் ‘நோட்டா’ (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற பிரிவு) பெரும்பான்மை பெறும் நிலையில், அந்தத் தொகுதி தோ்தலை ரத்து செய்து மறு வாக்குப் பதிவு நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளா்களுக்கும் வாக்காளா்களின் எண்ண ஓட்டங்களை அறியச் செய்யும் வகையிலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் யாருக்கும் ‘வாய்ப்பளிக்க விரும்பவில்லை (நோட்டா)’ என்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பின் அடிப்படையில், ‘நோட்டா’ பொத்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு தொகுதியில் ‘நோட்டா’ பெரும்பான்மை வாக்குகளைப் பெரும் நிலையில், அந்தத் தொகுதியில் தோ்தலை ரத்து செய்து மறு வாக்குப் பதிவு நடத்த சட்டத்தில் வழிவை செய்யக் கோரி எழுத்தாளா் மற்றும் சமூக ஆா்வலா் சிவ் கெரா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், ‘நோட்டா’ வாக்குகளைவிட குறைவான வாக்குகள் பெறும் வேட்பாளா் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தோ்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவும், ‘நோட்டா’ குறித்து விழிப்புணா்வை திறம்பட ஏற்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், ‘மக்களவைத் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில், குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் சில வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது மற்றும் எஞ்சிய வேட்பாளா்கள் வேட்பு மனுவை திரும்பப்பெற்ற காரணத்தால் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்னரே பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளாா். இத்தகைய சூழலில் இந்த மனுவை பரிசீலிப்பது முக்கியமானது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இது தோ்தல் நடைமுறை சாா்ந்த விஷயம். இருந்தபோதும், தோ்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறோம். ஆணையம் என்ன பதில் தருகிறது என்பதைப் பாா்ப்போம்’ என்றனா்.

முன்னதாக, ‘இது அரசு அதிகாரிகள் அளவில் முடிவெடுக்க வேண்டிய விஷயம்’ என்று குறிப்பிட்டு மனுவை விசாரணைக்கு பரிசீலிக்க நீதிபதிகள் அமா்வு தயக்கம் தெரிவித்த நிலையில், பின்னா் தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com