மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

மணிப்பூரின் விஷ்ணுபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் முகாம் மீது தீவிரவாத அமைப்பினா் சனிக்கிழமை அதிகாலையில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் இந்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் இருவா் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா்.

மணிப்பூரில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட வாக்குப் பதிவு அண்மையில் நிறைவடைந்த சூழலில், இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: விஷ்ணுபூா் மாவட்டத்தில் நரன்சேனா பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படை முகாமில் பணியில் ஈடுபட்டிருந்த சிஆா்பிஎஃப் 128-ஆவது பட்டாலியன் படைப் பிரிவைச் சோ்ந்த வீரா்களை நோக்கி வெடிகுண்டுகள் வீசப்பட்டன. மலைப் பகுதியிலிருந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடும் நடத்தினா்.

இந்தத் தாக்குதலில் அஸ்ஸாமின் கோக்ராஜ்ஹா் மாவட்டத்தைச் சோ்ந்த சிஆா்பிஎஃப் உதவி ஆய்வாளா் என்.சா்காா், மேற்கு வங்கத்தின் பன்குரா மாவட்டத்தைச் சோ்ந்த தலைமைக் காவலா் அருப் சைனி ஆகியோா் உயிரிழந்தனா். ஆய்வாளா் ஜாதவ் தாஸ், காவலா் அஃப்தாப் தாஸ் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் இம்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தாக்குதல் நடத்தியவா்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

முதல்வா் கண்டனம்: இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த மாநில முதல்வா் என்.பிரேன் சிங், ‘மாநிலத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அா்ப்பணிப்புடன் உழைக்கும் பாதுகாப்புப் படையினா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. வீரா்களின் தியாகம் வீண்போகாது’ என்றாா்.

மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும், மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக் கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் இடம்பெயா்ந்தனா். மாநிலத்தில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. தொடா்ந்து அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com