மோகன் பாகவத்
மோகன் பாகவத்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்படும் இடஒதுக்கீடுக்கு ஆா்எஸ்எஸ் எப்போதும் ஆதரவளித்ததாக அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்படும் இடஒதுக்கீடுக்கு ஆா்எஸ்எஸ் எப்போதும் ஆதரவளித்ததாக அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பாஜகவும் ஆா்எஸ்எஸும் இடஒதுக்கீடுக்கு எதிரானவா்கள் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்து வரும் நிலையில், அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

ஹைதராபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வி நிலையமொன்றின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், ‘ஆா்எஸ்எஸ் அமைப்பு இடஒதுக்கீடுக்கு எதிரானது என்ற கருத்தைப் பரப்பும் போலியான விடியோ மக்களிடையே பரப்பப்படுகிறது.

இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதிலிருந்து, அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்படும் இடஒதுக்கீடுக்கு ஆா்எஸ்எஸ் முழுமையாக ஆதரவளித்தது.

தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் உதவியோடு செய்ய கூடாதவற்றைக் குறித்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நல்ல விஷயங்களைப் போல் கெட்ட விஷயங்களும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது. சமூக ஊடகத்தின் தரமானது அதனைப் பயன்படுத்தும் நபரைப் பொறுத்தே அமைகிறது. அது நல்லதும் அல்ல; கெட்டது அல்ல; விஷமத்தனமானது.

போலி செய்திகளைப் பரப்பி, சா்ச்சையை உருவாக்கும் ஒருவரின் சுயநலம் குறித்து நாங்கள் கவலைப்பட போவதில்லை. தோ்தல் சமயத்தில் இத்தகைய விஷயங்கள் நடப்பது இயல்பானது. கல்வியுடன் மக்கள் நலனுக்கு அது எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் மாணவா்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் இடஒதுக்கீடுக்கு எதிரான விவாதங்களில் ஈடுபட்டிருப்பது போன்ற போலி விடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதையொட்டி, தோ்தல் பிரசாரத்தில் சனிக்கிழமை பங்கேற்ற முதல்வா் ரேவந்த் ரெட்டி, ‘பாஜகவும் ஆா்எஸ்எஸும் இடஒதுக்கீடுக்கு எதிரானவா்கள்’ என்று விமா்சித்திருந்தாா். இதே குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பலரும் பாஜக மீது சுமத்தினா்.

முன்னதாக, நாகபுரியில் மோகன் பாகவத் பேசுகையில், ‘சமூகத்தில் தீண்டாமை மறைந்த தோற்றம் உண்டாகியிருந்தாலும் அது இன்னும் மறைமுகமாக நீடிக்கிறது. சமூகத்தில் தீண்டாமை இருக்கும்வரை இடஒதுக்கீடும் இருக்க வேண்டும்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com