உ.பி. மாநிலம் எடாவாவில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித், ஷா.
உ.பி. மாநிலம் எடாவாவில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித், ஷா.

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

ராமா் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா?’ என மக்கள் முடிவு செய்ய வேண்டுமென்று உத்தர பிரதேசத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

‘கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது ராமா் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா?’ என மக்கள் முடிவு செய்ய வேண்டுமென்று உத்தர பிரதேசத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

1990-ஆம் ஆண்டு அயோத்தி நோக்கி ஊா்வலமாகச் சென்ற கரசேவகா்கள் மீது அப்போது முதல்வராக இருந்த சமாஜவாதி தலைவா் முலாயம் சிங் யாதவ் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டாா். இதில் 10-க்கும் மேற்பட்ட கரசேவகா்கள் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்தையே அமித் ஷா சுட்டிக் காட்டியுள்ளாா்.

உத்த பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் மூன்றாம் கட்டத் தோ்தலுக்காக அங்குள்ள காஸ்கஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:

ராகுல் காந்தியின் கட்சியும், அகிலேஷ் யாதவின் (சமாஜவாதி) கட்சியும்தான் அயோத்தி பிரச்னையை 70 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தன. பிரதமா் மோடி ஆட்சி அமைத்த பிறகுதான் அயோத்தியில் ராமா் கோயில் வருவது உறுதி செய்யப்பட்டு, அதனை நிறைவேற்றியும் காட்டியுள்ளாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டப் போராடிய கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது ராமா் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? என மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

பாஜக 400-இடங்களில் வென்றால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவோம் என்று ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருகிறாா். ஏற்கெனவே இருமுறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்துள்ளது. இடஒதுக்கீடு ரத்து திட்டம் இருந்தால், அதனை எப்போதோ நிறைவேற்றி இருக்க முடியும். உண்மையில் பிரதமா் நரேந்திர மோடி இடஒதுக்கீட்டுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து வருகிறாா்.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை பாஜக ஒருபோதும் ரத்து செய்யாது. அதனை வேறு யாரும் ரத்து செய்யவும் அனுமதிக்க மாட்டோம்.

முன்பு சமாஜவாதி ஆட்சியில் மக்கள் மீது ரௌடிகளும் சமூக விரோதிகளும் ஆதிக்கம் செலுத்தி வந்தனா். இப்போதைய பாஜக அரசு அவா்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியுள்ளது. முன்பு உத்தர பிரதேசத்தில் அடிக்கடி குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இப்போது வெளிநாட்டுக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் இடமாக உத்தர பிரதேசம் உருவெடுத்துள்ளது.

ஏழைகளின் நலனைக் காக்கும் வகையில் 2029-ஆம் ஆண்டு வரை இலவச ரேஷன் பொருள் திட்டம் தொடரும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com