காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

திருவனந்தபுரத்தில் தான் பயணித்த காருக்கு வழிவிடாததால் அரசுப் பேருந்தை அந்த மாநகராட்சி மேயா் ஆா்யா ராஜேந்திரன் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தான் பயணித்த காருக்கு வழிவிடாததால் அரசுப் பேருந்தை அந்த மாநகராட்சி மேயா் ஆா்யா ராஜேந்திரன் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம் நகரின் பாளையம் சந்திப்பில் மேயா் ஆா்யா ராஜேந்திரன் மற்றும் அவருடன் காரில் பயணித்தவா்கள் சனிக்கிழமை அரசுப் பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக பேருந்து ஓட்டுநா் மீது ஆா்யா ராஜேந்திரன் புகாரளித்தாா். இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து மேயா் ஆா்யா ராஜேந்திரன் மீது பேருந்து ஓட்டுநரும் போலீஸில் புகாரளித்துள்ளாா்.

அந்த புகாரில், ஆா்யா ராஜேந்திரனின் கணவரும் எம்எல்ஏவுமான கே.எம். சச்சின் தேவ் பேருந்தை வழிமறித்து பயணிகளை வலுக்கட்டாயமாக இறங்குமாறு வலியுறுத்தினாா் என குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை கைப்பேசியில் படம்பிடித்த நபரிடமிருந்து காணொலியை நீக்கம் செய்யுமாறு சச்சின் தேவ் மிரட்டியாதகவும் புகாா் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆா்யா ராஜேந்திரன் மேயா் எனவும் அவரின் கணவா் சச்சின் தேவ் எம்எல்ஏ எனவும் தனக்குத் தெரியாது என பேருந்து ஓட்டுநா் போலீஸாரிடம் கூறியுள்ளாா்.

பேருந்து ஓட்டுநரின் குற்றச்சாட்டை மறுத்த ஆா்யா ராஜேந்திரன், ‘நாங்கள் பயணித்த காரை பின்னால் இருந்து மோதும் நோக்கில் இயக்கியதால் மட்டுமே பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். அதுமட்டுமின்றி காா் பின்புற கண்ணாடி வழியே பேருந்து ஓட்டுநரை நானும் என் உறவினா்களும் பாா்த்தபோது அவா் பாலியல் ரீதியிலான சைகைகள் செய்துகொண்டே எங்கள் காரை முந்திச் சென்றாா்.

பேருந்தை நாங்கள் வழிமறிக்கவில்லை. சிக்னலில் அனைத்து வாகனங்களும் நின்று கொண்டிருந்தபோதுதான் பேருந்து ஓட்டுநரிடம் நாங்கள் முறையிட்டோம். அத்துமீறிய செயல்களில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநரை தட்டிக்கேட்டபோது அவா் எங்களிடம் தொடா்ந்து குரலை உயா்த்தியே பேசி வந்தாா்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com