காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

பாஜக வெற்றி பெற காங்கிரஸும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உதவுகின்றன என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற காங்கிரஸும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உதவுகின்றன என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸால் மட்டுமே பாஜகவைத் தோற்கடிக்க முடியும் என்று கூறி, காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்க மம்தா மறுத்துவிட்டாா். இதனால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கைகோத்து அந்த மாநிலத்தில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எனவே, தோ்தல் களத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானா்ஜி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் திரிணமூல் காங்கிரஸுக்கு எந்த கூட்டணியும் இல்லை. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸும்தான் கூட்டணி அமைத்துள்ளன. இந்த இரு கட்சிகளும் பாஜகவுடன் மறைமுகமாக கைகோத்து, அக்கட்சிக்கு உதவி வருகின்றன.

மக்கள் காங்கிரஸுக்கோ அல்லது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கோ வாக்களித்தால், அது பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதற்கே காரணமாக அமையும். எனவே, திரிணமூல் காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸும், மாா்க்சிஸ்ட் கட்சியும் பாஜகவின் இரு கண்கள் போல செயல்படுகின்றன. மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளுடான தொடா்பைத் துண்டித்தால் மட்டுமே காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்தப்படும் என்று திரிணமூல் நிபந்தனை விதித்தது. ஆனால், அதனை காங்கிரஸ் ஏற்கவில்லை. எனவேதான், காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு ஏற்படவில்லை.

மேற்கு வங்கத்துக்கு வெளியே இந்தியா கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளது. ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரை அளித்ததே நான்தான். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-மாா்க்சிஸ்ட் தலைவா்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டுடன் உள்ளதால், இங்கு இந்தியா கூட்டணி இல்லை.

பாஜகவை மத்திய ஆட்சியில் இருந்து அகற்ற மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறுவது அவசியமாகும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com