காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

சலுகைசார் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸால் நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கா்நாடக மாநிலம், பெல்காமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
கா்நாடக மாநிலம், பெல்காமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

சலுகைசார் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸால் நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மக்களவை மூன்றாம் கட்டத் தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலம், பெலகாவியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:

மக்களின் சொத்துகளைப் பெருக்க பாஜக திட்டமிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துகளை "எக்ஸ்ரே' செய்ய இருப்பதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துகள், வங்கி சேமிப்புப் பெட்டகங்கள், நிலங்கள், வாகனங்கள், சீர்வரிசைகள், தங்க நகைகள் மற்றும் தாலியை "எக்ஸ்ரே' செய்வார்கள். ஒவ்வொரு வீட்டையும் சோதனை செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்வார்கள். பின்னர், அவற்றை சிலருக்கு மறுபங்கீடு செய்வது பற்றியும் காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

இந்த நோக்கத்தை அடியோடு கைவிட வேண்டுமென காங்கிரஸை எச்சரிக்க விரும்புகிறேன். நான் (மோடி) உயிருடன் இருக்கும் வரை, இதைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன்.

சட்டம் ஒழுங்கு எங்கே?: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கர்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெலகாவியில் ஆதிவாசிப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிக்கோடியில் சமணத் துறவி கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் கர்நாடகத்தின் பெருமையைத் தரம் குறைத்துள்ளன.

ஹுப்பள்ளியில் கல்லூரி வளாகத்திலேயே மாணவி நேஹா ஹிரேமத் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி வளாகத்தில் மாணவியைக் கொல்லும் தைரியம் ஒருவருக்கு எங்கிருந்து வருகிறது? வாக்கு வங்கிக்காக அலைபவர்கள் தங்களைக் காப்பாற்றுவர் என்ற தைரியத்தில்தான் சமூக விரோதிகள் இப்படிச் செய்கிறார்கள். வாக்கு வங்கிக்காக சலுகைசார் அரசியலில் ஈடுபடும் காங்கிரஸôல் நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது.

பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்தபோது, அதை காங்கிரஸ் அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. சமையல் உருளை வெடித்திருக்கலாம் என்று சமாதானம் கூறினார்கள்.

வாக்குகளைப் பெறுவதற்காக, தடை விதிக்கப்பட்ட தேசவிரோத அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆதரவை காங்கிரஸ் பெற்றுக் கொள்கிறது. வயநாடு தொகுதியில் (ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி) வெற்றி பெறுவதற்காக அந்த அமைப்பிடம் காங்கிரஸ் சரணடைந்துவிட்டது. ஆனால், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை பாஜக தடை செய்து, அதன் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளது என்றார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பெலகாவி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர், சிக்கோடி தொகுதி பாஜக வேட்பாளர் அன்னாசாஹேப் சங்கர் ஜொள்ளே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராமர் கோயிலைத் தடுக்க காங்கிரஸ் முயற்சி: வடகன்னட மாவட்டம், சிர்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்த மறுநாளே ராமர் கோயில் கட்டும் முடிவை எடுத்திருக்க வேண்டும். ராமர் கோயில் கட்டப்படக் கூடாது என்பதற்காக கடைசி நேரம் வரை காங்கிரஸ் முயற்சித்தது. கடைசி நாளிலும்கூட தடைபெற நீதிமன்றத்தை காங்கிரஸ் அணுகியது.

ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்ள ராமர் கோயில் அறங்காவலர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், அந்த அழைப்பை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர். ராமர் கோயிலின் அழைப்பை ஏற்க மறுத்தவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்.

இதற்கு மாறாக, அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட வேண்டும் என்று மூன்று தலைமுறைகளாகப் போராடிய அன்சாரி குடும்பத்தினர், முஸ்லிம்களாக இருந்தாலும் ராமர் கோயில் அழைப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டதோடு, அந்த விழாவிலும் கலந்துகொண்டனர்.

இன்றைய இந்தியாவை உலகமே பாராட்டி மகிழ்கிறது. இந்தியர் ஒருவர் வெளிநாடு சென்றால், தலைநிமிர்ந்து செல்கிறார். உலகின் எவ்வளவு பெரிய தலைவரை நான் சந்தித்தாலும், எனக்குப் பின்னால் 140 கோடி இந்திய மக்கள் உள்ளனர் என்ற நினைவே எனக்கு துணிவைத் தருகிறது என்றார் பிரதமர் மோடி.

இந்தியாவை பலவீனப்படுத்த சில நாடுகள் முயற்சி: விஜயநகரா மாவட்டம், ஹொசபேட்டில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது:

நமது நாடு வேகமாக முன்னேறி வருவதை சில வெளிநாடுகள், அமைப்புகள் விரும்பவில்லை. வலிமையான இந்தியாவை விரும்பாத சிலர், இந்தியாவும், அதன் அரசும் பலவீனமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பலவீனமான அரசு இருந்தால், தங்கள் தேவைகள் எளிதில் நிறைவேறும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால், அதை எந்த வகையிலும் வளைக்க முடியாது என்பதுதான் அவர்களின் கவலை.

"உள்ளூர் பொருள்களுக்கான குரல்' என்ற பாஜகவின் முன்னெடுப்பால், உலகச் சந்தையில் இந்திய பொருள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கர்நாடகத்தில் முந்தைய பாஜக அரசு விதைத்திருந்த வளர்ச்சியின் விதைகளை காங்கிரஸ் அரசு அழித்து வருகிறது; பாஜக அரசு செய்த நல்ல பணிகளை இந்த அரசு முடக்கி வருகிறது என்றார்.

மன்னர்களை அவமதிக்கிறார் ராகுல்:

கர்நாடக பிரசாரத்தில் ராகுல் காந்தியை விமர்சித்து பிரதமர் மோடி பேசியதாவது: குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்தும் நோக்கில், வாக்கு வங்கியைக் குறிவைத்து, நமது நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாறு எழுதப்படுவதை காங்கிரஸ் இதுவரை செய்து வந்துள்ளது. இன்றும் அந்தச் செயலை தொடர்கிறார் ராகுல் காந்தி.

மக்களின் சொத்துகள் மற்றும் நிலங்களை, மன்னர்கள், மகாராஜாக்கள் பறித்துக் கொண்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதன்மூலம், ஆட்சி நிர்வாகம், நாட்டுப் பற்றில் முன்னுதாரணமாக விளங்கும் ஆளுமைகளான சத்ரபதி சிவாஜி மகராஜ், கித்தூர் ராணி சென்னம்மா போன்றோரை ராகுல் காந்தி அவமதித்துள்ளார். மைசூரு மன்னர் குடும்பத்தினர் ஆற்றிய பங்களிப்புக்காக நாடு முழுவதும் இன்றைக்கும் அவர்கள் போற்றப்படுகின்றனர்.

மன்னர்கள், மகாராஜாக்களை தரக்குறைவாக விமர்சித்திருக்கும் ராகுல் காந்தி, இந்திய வரலாற்றில் நவாபுகள், நிஜாம்கள், சுல்தான்கள், பாதுஷாக்கள் நிகழ்த்திய வன்முறைகள் குறித்து எதுவும் பேசி இருக்கிறாரா? முகலாய ஆட்சியாளர் ஒüரங்கசீப்பின் அடக்குமுறைகளை ராகுல் காந்தி நினைவு கூர்வாரா? ஏராளமான ஹிந்து கோயில்களை அழித்தவர் ஒüரங்கசீப். அவரைப் புகழ்ந்துரைக்கும் கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.

குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் மனநிலை, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் வெளிப்பட்டுள்ளது. அக் கட்சி மிகவும் ஆபத்தான வாரிசுரிமை வரி திட்டத்தை முன்மொழிந்துள்ளது என்றார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com