”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

”காந்தியின் பெயரை வைத்துக்கொண்டு...” -பிரியங்கா காந்தியை கடுமையாக விமர்சித்த மத்திய பிரதேச முதல்வர்.
”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்
படம் | ஏஎன்ஐ

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை குறிப்பிட்டு, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்
மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்

காங்கிரஸ் ஆட்சியமைந்தால் பெண்களின் தாலி உள்ளிட்ட நகைகள் கூட அபகரிக்கப்பட்டு, அவை காங்கிரஸின் வாக்கு வங்கிகளாக இருப்போருக்கு(முஸ்லிம்களுக்கு) வழங்கப்படும் அபாயம் இருப்பதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையானது. இதற்கு பதிலடியாக, தனது தாயார் சோனியா காந்தி தனது தாலியை இந்த தேசத்திற்காக தியாகம் செய்துள்ளார் எனக் கூறியிருந்தார் பிரியங்கா காந்தி. இந்த நிலையில், ‘தாலி அரசியலை’ மையப்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய பிரதேசத்தின் குணா மக்களவை தொகுதியில் சனிக்கிழமையன்று (ஏப். 27) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோகன் யாதவ், “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ’தாலி’ அணியாமல் இருப்பதைக் கண்டு, கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும்.

வழக்கமாக, மகள்களை திருமணம் செய்து கொடுத்தவுடன் அவர்களின் பெயர்களுக்குப் பின்னால், புகுந்த வீட்டின் குடும்பப் பெயரை இணைத்து கொள்வதே வழக்கம். ஆனால், வாக்குகளுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் ’வாக்குப் பசி’ நிறைந்த இவர்களைப் போன்றோர், வாக்குகளை பெறுவதற்காக தங்களுடைய குடும்பப் பெயரை மறந்துவிட்டு(புகுந்தவீட்டின் பெயர்), ‘காந்தியின்’ பெயரை இன்றளவும் தங்களின் பெயர்களுடன் இணைத்துக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர்.

பிரியங்காவின் பெயருக்குப் பின்னால் ’காந்தி’ என்ற பெயர் எங்கிருந்து வந்தது? காந்தியின் குடும்ப உறுப்பினர்கள் எங்கே போயிருப்பார்கள்? இத்தகைய 'போலி காந்திகள்', ‘காந்தியின்’ பெயரில் வாக்குகளை பெற்று வருகிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேச முதல்வரின் பேச்சுக்கு இன்று(ஏப். 28) தனது எக்ச் தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கேகே மிஸ்ரா, பிரியங்கா காந்தியின் பெயருக்கு பின்னால் அவருடைய கணவரின் குடும்பப் பெயரான 'வத்ரா’ எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. ஆகவே, அதைப் பார்த்துவிட்டு பேசுமாறு பதிலடி கொடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com