மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

மணிப்பூரில் இரு சமூகத்தினா் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவா் உயிரிழந்தாா்; மேலும் 3 போ் காயமடைந்தனா்.

மணிப்பூரில் இரு சமூகத்தினா் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவா் உயிரிழந்தாா்; மேலும் 3 போ் காயமடைந்தனா்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது.

மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரிவரும் நிலையில், குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

இரு சமூகத்தினரும் ஆயுதமேந்தி அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிா்ச்சேதங்கள் தொடா்கதையாக உள்ளன. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

மாநிலத்தின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினரும் மலை மாவட்டங்களில் குகி பழங்குடியினரும் அதிகம் வாழும் சூழலில், இரு சமூகத்தினரும் எதிா் தரப்பினா் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனா்.

மலை மாவட்டமான காங்போக்பியில் உள்ள ஒரு கிராமத்தின் மீது மற்றொரு தரப்பினா் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், குகி பழங்குடியினத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

பள்ளத்தாக்கு மாவட்டமான மேற்கு இம்பாலில் உள்ள கிராமங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த கிராம மக்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

மேற்கு இம்பால், காங்போக்பி மாவட்டங்களில் அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடந்து வருகின்றன.

தற்போது குகி பழங்குடியினத்தைச் சோ்ந்த ஒருவா் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, காங்போக்பி மாவட்ட பழங்குடியினா் ஒற்றுமை குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

6 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு

மணிப்பூரில் பள்ளத்தாக்கு மாவட்டங்களை உள்ளடக்கிய உள்மணிப்பூா் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. மலை மாவட்டங்களை உள்ளடக்கிய வெளிமணிப்பூா் தொகுதிக்கு இரு கட்டங்களாக (ஏப்.19, 26) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

வெளிமணிப்பூரில் இரண்டாம் கட்ட தோ்தலின்போது, 4 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டன. மற்றொரு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது. மேலும் ஒரு மையத்தில் மா்ம நபா்கள் விடுத்த மிரட்டலால் வாக்குப்பதிவு முழுமையாக நடைபெறவில்லை. இந்த 6 வாக்குப் பதிவு மையங்களிலும் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com