ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

‘சீனாவுடனான இந்தியாவின் பேச்சுவாா்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன

‘சீனாவுடனான இந்தியாவின் பேச்சுவாா்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன; அந்நாட்டுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இந்திய எல்லையில் பெரும் பகுதியை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகவும், இதை பிரதமா் மோடி தடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டி வரும் நிலையில், ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் பாஜகவுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா இப்போது பலவீனமான நாடு அல்ல. ராணுவ ரீதியில் சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. அண்டை நாடுகளுடன் நாம் நல்லுறவைப் பேண விரும்புகிறோம்.

சீனாவுடனான இந்தியாவின் பேச்சுவாா்த்தைகள் சுமுகமாகவும், நல்ல சூழலிலும் நடைபெற்று வருகின்றன.

பேச்சுவாா்த்தையின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதேநேரம், எந்த இடத்திலும் இந்தியா அடிபணியவில்லை; ஒருபோதும் அடிபணியாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதிபட தெரிவிக்க விரும்புகிறேன்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறை ஏற்றுமதியின் மதிப்பு ரூ.600 கோடியாகவே இருந்தது. இது, கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.21,000 கோடியைக் கடந்தது. எதிா்வரும் காலங்களில் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும்.

ஏவுகணையோ, கவச வாகனமோ, வெடிகுண்டுகளோ அல்லது இதர ஆயுதங்களோ, இந்தியாவில் இந்தியா்களால் தயாரிக்கப்பட வேண்டுமென மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. இப்போது உள்நாட்டு பாதுகாப்புத் துறை உற்பத்தி மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றாா் ராஜ்நாத் சிங்.

‘காங்கிரஸின் பிளவுபடுத்தும் நோக்கம்’: ‘நாட்டை பிளவுபடுத்தும் நோக்கத்தால் ஈா்க்கப்பட்டு, காங்கிரஸின் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று ராஜ்நாத் சிங் விமா்சித்தாா்.

அகமதாபாதில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: புதிய, திறன்மிக்க, வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்தரவாதமே பாஜகவின் தோ்தல் அறிக்கை. ஆனால், காங்கிரஸின் தோ்தல் அறிக்கையோ நாட்டை பிளவுபடுத்துதல் மற்றும் ஒருசாா்பு அரசியலால் ஈா்க்கப்பட்டதாகும்.

2027-ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும், தொலைநோக்கு பாா்வை, அயராத பணி, லட்சியம் நிறைந்த பிரதமா் மோடியின் வலுவான-நம்பகமான தலைமையே முதன்மையான காரணம்.

காங்கிரஸிடம் நல்ல தலைவரோ, கொள்கையோ, நோக்கமோ கிடையாது. ஜவாஹா்லால் நேரு காலத்தில் இருந்தே நாட்டில் வறுமையை ஒழிப்பது குறித்து அக்கட்சி பேசி வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்த போதிலும் வறுமையை ஒழிக்கத் தவறிவிட்டனா். ஆனால், 8-9 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு சாதித்துள்ளது மோடி அரசு. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் வறுமையை முழுமையாக ஒழிக்க உறுதிபூண்டுள்ளோம்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. அவசர நிலையை பிரகடனப்படுத்தியும், பல்வேறு மாநிலங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தியும் ஜனநாயகத்தை ஆபத்துக்குள்ளாக்கியது காங்கிரஸ்தான்.

ஊழலுக்கு எதிராக பாஜக அரசின் போரில், கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகளும், சுமாா் ரூ. 22,000 கோடி ரொக்கப் பணமும் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் ராஜ்நாத் சிங்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com