ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

கார்த்திகேயன் பாண்டியன், அமித் ஷா, நரேந்திர மோடி, நவீன் பட்நாயக் ஆகியோரால் மாநில அரசாங்கம் நடத்தப்படுகிறது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் கார்த்திகேயன் பாண்டியன்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் கார்த்திகேயன் பாண்டியன்.

ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, மொத்தமுள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 42 மக்களவை தொகுதிகளுக்கும் மே 13 தொடங்கி 20, 25, ஜூன் 1 என 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

அங்கு முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்துப் போட்டியிடுகிறது. மறுபுறம் பாஜகவும், காங்கிரஸும் தனித்துப் போட்டியிடுவதால் ஒடிஸாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், ஒடிஸாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விருப்ப ஓய்வு பெற்று பிஜு ஜனதா தளத்தில் இணைந்துள்ள தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன், அம்மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை கடுமையாக விமர்சித்தார்.

கேந்த்ரபாறாவில் இன்று(ஏப். 28) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, “ஒடிஸா மாநில அரசை நிர்வகிப்பது முதல்வர் நவீன் பட்நாயக் அல்ல, பாண்டியன். பாண்டியன், அமித் ஷா, நரேந்திர மோடி, நவீன் பட்நாயக் ஆகியோரால் மாநில அரசாங்கம் நடத்தப்படுகிறது.

பிஜு ஜனதா தளமும் பாஜகவும் ஒருங்கிணைந்தே செயல்படுகின்றன. சுரங்க ஊழல் மூலம் ரூ. 9,00,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நில அபகரிப்பில் ரூ. 20,000 கோடி, தோட்ட ஊழலில் ரூ. 15,000 கோடி என கோடிகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், மக்கள் பணத்தை திருப்பித் தரத் தொடங்குவோம்.

அதன் முதல்படியாக, பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ. 2,000 வழங்கப்படும், வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 3,000 வழங்கப்படும். 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். முக்கியமாக, ரூ. 500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சியமைத்தால் ஐந்து புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்துவோம். நாட்டில் ஏழைக் குடும்பங்கள் எத்த்னை உள்ளன என்பதைக் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலும் ஒரு பெண் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும், ரூ. 1 லட்சம் அனுப்பப்படும். அதாவது, மதந்தோறும் ரூ. 8,500 என்ற கணக்கீட்டின்படி.

பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி அளிக்கப்படுவதோடு, பொதுத்துறை, தனியார் துறை, அரசு மருத்துவமனைகள், அலுவலகங்கள் என ஏதாவது ஒரு துறையில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்” என உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com