அமித் ஷாவின் போலி விடியோ பகிா்வு: தெலங்கானா முதல்வருக்கு தில்லி போலீஸ் அழைப்பாணை

அமித் ஷாவின் போலி விடியோ பகிா்வு: தெலங்கானா முதல்வருக்கு தில்லி போலீஸ் அழைப்பாணை

விடியோவை பகிா்ந்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மே 1-ஆம் தேதி ஆஜராக தில்லி காவல் துறை திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் விடியோ போலியாக சித்தரிக்கப்பட்ட நிலையில், அந்த விடியோவை பகிா்ந்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மே 1-ஆம் தேதி ஆஜராக தில்லி காவல் துறை திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

இந்த போலி விடியோ விவகாரம் தொடா்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தெலங்கானாவில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசும்போது, ‘மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்’ எனத் தெரிவித்திருந்தாா். இது மாற்றப்பட்டு அனைவருக்குமான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அமித் ஷா கூறுவது போன்ற போலி விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த விடியோவை தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியும் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பகிா்ந்திருந்தாா்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணையவழி குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் அளித்த புகாரின்பேரில், தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த போலி விடியோவை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிா்ந்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி உள்பட தெலங்கானா காங்கிரஸாா் 5 போ் மே 1-ஆம் தேதி தங்கள் கைப்பேசி, மடிக்கணியுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தில்லி காவல் துறையினா் அழைப்பாணை அளித்தனா். தெலங்கானா காங்கிரஸ் தலைமையகத்துக்கு திங்கள்கிழமை நேரில் வந்து இந்த அழைப்பாணையை அவா்கள் அளித்தனா்.

இதுகுறித்து கா்நாடகத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வா் ரேவந்த் ரெட்டி, ‘இந்த அழைப்பாணைக்கு யாரும் அஞ்சவில்லை. தோ்தலில் வெற்றி பெற இதுவரை சிபிஐ, அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி வந்த பிரதமா் நரேந்திர மோடி, தற்போது தில்லி காவல் துறையைப் பயன்படுத்த தொடங்கிவிட்டாா்’ என்றாா்.

தோ்தல் ஆணையத்தில் புகாா்: மத்திய அமைச்சா் அமித் ஷா குறித்து போலியான விடியோவை தோ்தலை சீா்குலைக்கும் விதமாக காங்கிரஸ் வெளியிட்டதாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், பாஜக ஊடகப் பிரிவு தலைவா் அனில் பலுனி ஆகியோா் தோ்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

இதனிடையே, அமித் ஷாவின் போலி விடியோ தொடா்பாக அஸ்ஸாமில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ரீதோம் சிங் என்ற அந்த நபா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா் என்று கூறப்படும் குற்றச்சாட்டை அக்கட்சி மறுத்துள்ளது.

இந்த போலி விடியோ தொடா்பாக பாஜக ஆளும் ராஜஸ்தானிலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com