அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

நாட்டு மக்களுக்கு அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன் என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!
ANI

நாட்டு மக்களுக்கு அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன் என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான பிரசாரத்தை கர்நாடகத்தில் காங்கிரஸ் செய்து வருகிறது. இதன்மூலம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளைப் பறிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

நமது அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதில்லை. ஆனால், கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு அளித்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலும் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தைத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தீய எண்ணங்கள் குறித்து தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்கு வங்கியை தக்கவைப்பதற்காக மத ரீதியில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. அதன்மூலம் பி.ஆர்.அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பறிக்கவும், அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும் காங்கிரஸ் முயற்சிக்கிறது. நாட்டு மக்களுக்கு அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாஜகவில் இருப்பதால் சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளைப் பறித்து, சிறுபான்மையினருக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதை நடத்தவிடலாமா? காங்கிரஸ் கட்சியின் இச்சதியை செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்; மக்களின் உரிமைகளையும் இட ஒதுக்கீடையும் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வேன். இதை மோடியின் வாக்குறுதியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எனது குரலில் சில காணொலிகளை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இத்தகைய போலி காணொலிகள் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். பின்னால் இருந்து தாக்கும் பழக்கம் மோடிக்கு இல்லை. எதையும் முன்னால் நின்று எதிர்கொள்வேன்.

துல்லியத் தாக்குதல்கள் குறித்து முதலில் பாகிஸ்தானுக்குத் தெரிவித்த பிறகே, உலகுக்குத் தெரிவித்தேன்; எதையும் மறைக்கும் பழக்கம் எனக்கில்லை.

காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியைக் கொடுத்தால் அவர்கள் கொள்ளை அடிப்பார்கள். கர்நாடகத்தை தங்களுக்கு நிதி வழங்கும் ஏடிஎம் இயந்திரமாக்கியுள்ள அக்கட்சி, குறுகிய காலத்தில் மக்கள் நிதியைக் கொள்ளையடித்துள்ளது. இதனால் வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நிதியை எம்எல்ஏக்களால் பெற முடியவில்லை.

விரைவில் கர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் நிதி இருக்காது. பெங்களூரு போன்ற தொழில்நுட்ப நகரத்தை ஆளும் காங்கிரஸ் அரசு குடிநீர் தட்டுப்பாட்டால் "டேங்கர் நகரம்' ஆக்கியுள்ளது. அதில் கிடைக்கும் கமிஷன் காங்கிரஸ் மேலிடத்துக்குச் செல்கிறது. 2 ஜி ஊழலைப்போல கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடிக்கும் கனவில் காங்கிரஸ் உள்ளது.

கர்நாடகத்தில் நிகழ்வது சாதாரண குற்றங்கள் அல்ல; பெரும்பாலானவை தீவிரவாதச் செயல்கள். வாக்கு வங்கிக்காக இதுபோன்ற அடிப்படைவாதிகளை காங்கிரஸ் பாதுகாத்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com