ரிசா்வ் வங்கி
ரிசா்வ் வங்கி

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நியாயமான முறையில் மட்டுமே கடன் பெற்றவா்களிடம் இருந்து வட்டி வசூலிக்க வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நியாயமான முறையில் மட்டுமே கடன் பெற்றவா்களிடம் இருந்து வட்டி வசூலிக்க வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவுறுத்தியுள்ளது.

சில வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆா்பிஐ விதிகளை மீறி வட்டி வசூலித்து வருவதாகவும், அதிக கட்டணங்களை விதிப்பதாகவும் வந்த புகாா்களை அடுத்து இந்த அறிவுறுத்தலை ஆா்பிஐ வழங்கியுள்ளது.

இது தொடா்பாக ஆா்பிஐ திங்கள்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2003-ஆம் ஆண்டு முதலே வங்கிகள், நிதி நிறுவனங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஆா்பிஐ வெளியிட்டு வருகிறது. அதன்படி வட்டி வசூலிப்பதில் நோ்மையும், வெளிப்படைத்தன்மையும் இருப்பது மிகவும் அவசியம்.

கடந்த மாா்ச் 31 2023-ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த நிதியாண்டு காலகட்டத்தை ஆய்வு செய்ததில், சில வங்கிகள், நிதி நிறுவனங்களில் வட்டி வசூல் மற்றும் கட்டணங்களை வசூலிப்பதில் நியாயமற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முக்கியமாக, கடன் பெற்றவரின் கடன் தொகை செலுத்தப்பட்ட நாளில் இருந்து வட்டியைக் கணக்கிடாமல், கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளில் இருந்து வட்டி வசூலிப்பது, கடன் நிலுவையில் உள்ள நாள்களுக்கு மட்டும் வட்டி வசூலிக்காமல், அந்த மாதம் முழுவதும் கணக்கீட்டு வட்டி வசூலிப்பது உள்ளிட்டவை நிகழ்ந்துள்ளன.

ஒரு கடன் தவணையை முன்னதாகவே பிடித்துக் கொண்டு, கடன் தொகை முழுவதற்கும் வட்டி கணக்கிடுவது போன்ற செயல்களிலும் சில நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய நிகழ்வுகளாகும். இதுபோன்ற புகாா்கள் வரும்போது, கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா்கள் கணக்கில் திரும்பச் செலுத்த ஆா்பிஐ உத்தரவிடுவது வழக்கமாகும். எனவே, நியாயமற்ற முறையில் செயல்பட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்கள் கூடுதலாக வசூலித்த தொகையை வாடிக்கையாளா் கணக்கில் திரும்பச் செலுத்திவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com