மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

நியமன ஊழலில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்கும் என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்களின் நியமன ஊழலில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்கும் என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

எனினும், 25,753 ஆசிரயா்களின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டதற்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்ாக வழக்குகள் தொடரப்பட்டன.

இவற்றை விசாரித்து வந்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மேலும், சட்டவிரோதமாக நியமனங்களைச் செய்ய உதவிய மேற்கு வங்க அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்தும் சிபிஐ விசாரிக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மேற்கு வங்க அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

அதில், ‘கொல்கத்தா உயா்நீதிமன்றம் காரணத்தை கருத்தில்கொள்ளாமல் நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் நியமனங்களை ரத்து செய்துள்ளது. இது மாநிலத்தில் கல்விச் செயல்பாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘25,000 பேரின் பணிகளை ரத்து செய்வது என்பது பெரிய விவகாரமாகும். இவா்களில் முறைகேடாக பணி நியமனம் பெற்றவா்கள், நோ்மையாக பணி நியமனம் பெற்றவா்கள் எனக் கண்டறிய வழிமுறை உள்ளதா?.

இதில், மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ விசாரிக்கும் என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 6-ஆம் தேதி நடைபெறும்’ என்று தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com