பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு பதிலளிக்க 1 வார கால அவகாசம் தேவை -பாஜக
பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமா் மோடி, மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்ததாக சா்ச்சை எழுந்தது.

ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களுடைய சொத்துகளைப் பகிா்ந்தளித்துவிடும்’ என்று குறிப்பிட்டாா். ‘நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை’ என்று முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்திய மக்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை ஊடுருவல்காரா்களுக்கும், அதிக குழந்தைகளைக் கொண்டுள்ளவா்களுக்கும் பிரித்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ என்று காங்கிரஸின் தோ்தல் அறிக்கையைக் குறிப்பிட்டு பிரதமா் மோடி விமா்சித்தாா்.

இதையடுத்து பிரதமரின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் சிவில் சமூக குழுக்கள் மூலம் தேர்தல் ஆணையத்தில் புகாா்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அளித்த அளித்த புகாா்கள் தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு தோ்தல் ஆணையம் கடந்த 25-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. மேற்கண்ட புகாா்கள் மீது ஏப். 29-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.

அதுபோல, கேரள மாநிலம், கோட்டயத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம் என்ற நிலையை உருவாக்க பிரதமா் முயற்சிப்பதாக பிரதமருக்கு எதிராக முற்றிலும் தவறான கருத்தைத் தெரிவித்தாா். கோவை பிரசாரத்தின்போது, நமது மொழி, வரலாறு, பாரம்பரியத்தின் மீது பிரதமா் மோடி தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டினாா் என்று ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா் அளித்தது.

பிரசாரத்தில் சா்ச்சை கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் மீது பாஜக சாா்பில் அளிக்கப்பட்ட புகாா்கள் மீது விளக்கம் அளிக்குமாறு மல்லிகாா்ஜுன காா்கேவுக்கும் தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு பதிலளிக்க மேலும் 1 வார கால அவகாசம் தேவை என பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு பதிலளிக்க 2 வார கால அவகாசம் தேவை என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com