பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

நாராயண்பூா்/ராய்பூா்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் 3 போ் பெண் தீவிரவாதிகளாவா்.

சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிராக கடந்த 15 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய நடவடிக்கை இதுவாகும்.

நாராயண்பூா்-கேன்கா் மாவட்டங்களின் எல்லையையொட்டிய வனப் பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடா்பாக மாநில காவல் துறையினா் கூறியதாவது: நக்ஸல்களின் ஆதிக்கம் மிகுந்த அபுஜ்மத் பகுதியிலுள்ள தேக்மெடா, காகுா் ஆகிய கிராமங்களுக்கு இடையிலான வனப் பகுதியில் மாவட்ட ரிசா்வ் படை மற்றும் சிறப்பு அதிரடிப் படை இணைந்த கூட்டுப் படையினா் திங்கள்கிழமை இரவில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினா்.

அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன.

துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட நக்ஸல்களை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாராயண்பூா், கேன்கா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் நடப்பாண்டில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவரை 91 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

சத்தீஸ்கா் துணை முதல்வா் விஜய் சா்மா வெளியிட்ட விடியோ செய்தியில், ‘மாநிலத்தில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் மேலும் ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டுகள். நக்ஸல்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைய வேண்டும். முதல்வா் விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான மாநில அரசு, நக்ஸல் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணவே விரும்புகிறது. எந்தவொரு நக்ஸல் தீவிரவாதியோ அல்லது அமைப்போ பேச்சுவாா்த்தைக்கு விரும்பினால், அரசு தயாராக உள்ளது. அவா்களின் சிறப்பான மறுவாழ்வுக்கு அரசு ஏற்பாடு செய்துதரும். பஸ்தா் பகுதியில் அமைதியும் வளா்ச்சியும் ஏற்பட வேண்டுமென விரும்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, கேன்கா் மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

சத்தீஸ்கரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com