ஒடிஸா பேரவைத் தேர்தல்: தொடர்ந்து 6-ஆவது முறையாக போட்டியிட நவீன் பட்நாயக் வேட்புமனு

ஒடிஸா மாநிலம் ஹின்ஜிலி பேரவைத் தொகுதியில் போட்டியிட செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் நவீன் பட்நாயக்.
ஒடிஸா மாநிலம் ஹின்ஜிலி பேரவைத் தொகுதியில் போட்டியிட செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் நவீன் பட்நாயக்.

புவனேசுவரம்: ஒடிஸாவின் ஹின்ஜிலி பேரவைத் தொகுதியில் தொடர்ந்து 6-ஆவது முறையாக போட்டியிடுவதற்காக, அந்த மாநில முதல்வரும் ஆளும் பிஜு ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 பேரவைத் தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக (மே 13, 20, 25, ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கஞ்ஜம் மாவட்டம் ஹின்ஜிலி பேரவைத் தொகுதியில் கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 5 முறை எம்எல்ஏவாக பதவிவகித்து வரும் முதல்வர் நவீன் பட்நாயக், அத்தொகுதியில் 6-ஆவது முறையாக போட்டியிட செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

சத்ராபூரில் உள்ள சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மாநில அமைச்சர்கள் மற்றும் தனது நெருங்கிய உதவியாளரான வி.கே.பாண்டியன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களுடன் வந்து, தனது வேட்புமனுவை பட்நாயக் தாக்கல் செய்தார்.

அஸ்கா மக்களவைத் தொகுதியில் அடங்கிய ஹின்ஜிலி பேரவைத் தொகுதியில் மே 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இம்முறை ஹின்ஜிலி மட்டுமன்றி, போலாங்கீர் மாவட்டத்திலுள்ள காந்தபாஞ்சி பேரவைத் தொகுதியிலும் நவீன் பட்நாயக் போட்டியிடுகிறார்.

ஒடிஸா அரசியலில் கோலோச்சி வரும் நவீன் பட்நாயக், இந்த மாநில முதல்வராக கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.

தற்போது 6-ஆவது முறையாக முதல்வராகும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொள்கிறார். ஒடிஸாவின் நீண்ட கால முதல்வர்; நாட்டின் இரண்டாவது நீண்ட கால முதல்வர் ஆகிய சிறப்புகளுக்கு உரியவர்.

தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்று, அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் நிலையில், சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை சில மாதங்களிலேயே முறியடித்து, நாட்டின் நீண்டகால முதல்வர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேட்புமனு தாக்கல்

மும்பை: மகாராஷ்டிரத்திலுள்ள வடக்கு மும்பை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே உடனிருந்தார்.

தற்போது மாநிலங்களவை பாஜக குழு தலைவராக உள்ள கோயல், முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் மே 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com