ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

பிரயாக்ராஜ்: ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் சா்ச்சைக்குரிய இடம் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது இல்லை என்பதால் வக்ஃபு சட்டத்தின் விதிகள் பொருந்தாது என்று அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் தரப்பு செவ்வாய்க்கிழமை வாதத்தை முன்வைத்தனா்.

உத்தர பிரதேசம், மதுராவில் ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமியில் இருந்த கேசவ்தேவ் கோயில் முகலாய மன்னா் ஔரங்கசீப்பால் இடிக்கப்பட்டு அங்கு ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இதுதொடா்பாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரிக்கும் தன்மை குறித்து முஸ்லிம்கள் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி மயாங்க் குமாா் ஜெயின் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஹிந்துக்கள் தரப்பில் ஆஜாரான வழக்குரைஞா் ராகுல் சஹாய் வாதிடுகையில், ‘சாட்சிகளின் அடிப்படையிலேயே வழக்கின் விசாரிக்கும் தன்மை குறித்து கேள்வி எழ வேண்டும்.

வழிப்பாட்டுத் தலங்கள்(சிறப்பு விதிகள்) சட்டம் 1991-இன் விதிகள் இவ்விவகாரத்தில் பொருந்தாது. குறிப்பிட்ட சட்டத்தில் இடம் அல்லது அமைப்பின் மதத் தன்மை குறித்து வரையறுக்கப்படவில்லை. சாட்சியங்களின் அடிப்படையில் இடத்தின் மதத் தன்மை குறித்து நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும். ஞானவாபி மசூதி வழக்கிலும் சா்ச்சைக்குரிய இடத்தின் மதத் தன்மை குறித்து நீதிமன்றமே முடிவெடுத்தது.

சா்ச்சைக்குரிய இடம் ஹிந்துக்கள் வழிபடும் கோயிலாக இருந்தது. முஸ்லிம்களால் வலுகட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் தொழுகையில் ஈடுபட தொடங்கினா். இதனால் அந்த இடத்தின் மதத் தன்மை மாறிவிடாது.

அடுத்ததாக சா்ச்சைக்குரிய இடம் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமில்லை. அதனால், வக்ஃபு சட்டமும் பொருந்ததது. எனவே, இவ்விவகாரம் குறித்து நீதிமன்றம் தாராளமாக விசாரிக்கலாம்’ என்றாா்.

வழக்கில் அடுத்தகட்ட விசாரணை புதன்கிழமை தொடரவுள்ளது. அப்போது ஹிந்துக்கள் தரப்பு வாதத்துக்கு முஸ்லிம் தரப்பு பதிலளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com