9 ஆண்டுகளாக கிடைக்காத பிஎஃப் பணம்: அலுவலகத்தில் தற்கொலை செய்த முதியவர்

சிவராமன் பிஎஃப் பணம் கிடைக்காததால் விரக்தியில் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கொச்சி: கேரள மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிவராமன் (69), தனது பிஎஃப் பணம் கிடைக்காததால் விரக்தியில் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில், தனக்கு வந்து சேர வேண்டிய பிஎஃப் பணம் கிடைக்காததால், விரக்தியில் இருந்து வந்தார்.

இதற்கிடையே, அவர் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று பிஎஃப் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது பள்ளி இறுதியாண்டுச் சான்றிதழை எடுத்துவரும்படி கேட்டுள்ளனர் அதிகாரிகள்.

தான் 1960ஆம் ஆண்டில் பள்ளிப்படிப்பை முடித்ததால், தற்போது சான்றிதழ் கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், பிஎஃப் பணம் 80 ஆயிரத்தைக் கொடுக்க அடையாளச் சான்றிதழாக பள்ளி இறுதிச் சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

இதனால், மனமுடைந்த சிவராமன், பிஎஃப் அலுவலகத்திலேயே விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக அவரை அலுவலர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வேண்டுமென்றே பிஎஃப் பணம் நிறுத்தி வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அது உறுதிசெய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

சிவராமன் குறித்து மகன் ரத்தீஷ் கூறுகையில், ஏற்கனவே அவர் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். சிகிச்சைக்காக பிஎஃப் பணத்தைப் பெற பல முறை அலைந்தும் கூட பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நியாயம் கிடைக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com