அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

அருணாசல பிரதேசத்தின் 3 மாவட்டங்கள், நாகாலாந்தின் 8 மாவட்டங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்தின் 3 மாவட்டங்கள், நாகாலாந்தின் 8 மாவட்டங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின்கீழ் பிரச்னைக்குரிய பகுதிகளாக அறிவிக்கப்படும் இடங்களில் பொது அமைதியை பராமரிப்பதற்காக தேடுதல் வேட்டை, கைது, துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆயுதப் படைகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில், அருணாசல பிரதேசத்தின் திராப், சங்லாங், லாங்டிங் ஆகிய மாவட்டங்களும், நாகாலாந்தின் திமாபூா், பெரேன் உள்ளிட்ட 8 மாவட்டங்களும் பிரச்னைக்குரிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை மறுஆய்வு செய்து, ஆயுதப் படை சிறப்புச் சட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கண்ட மாவட்டங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் வியாழக்கிழமை அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. முன்னதாக, வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை சுமாா் 70 சதவீத இடங்களில் இச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீரில் இச்சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் கூறியிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com