பெங்களூரு குண்டு வெடிப்பு:  தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

பெங்களூரு குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் அப்துல் மத்தீன் அகமது தஹா, முஸ்ஸவீா் ஹுசேன் ஷஜீப் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும். info.bir.nia@gov.in, 080-29510900, 8904241100 என்ற எண்களுக்கு தகவல் அளிக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. பெங்களூரு, குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மாா்ச் 1ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. இதில் 10 போ் காயமடைந்தனா். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை, பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் தனித்தனியே விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில் உணவகத்தில் குண்டுவைத்த குற்றவாளியை அடையாளம் கண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை அவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.

மேலும், அவரைக் கண்டுபிடிக்க துப்புக்கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இதனிடையே, உணவகத்தில் குண்டுவைத்த குற்றவாளி பேருந்தில் பெங்களூரில் இருந்து தும்கூரு வழியாக பெல்லாரி சென்று அங்கிருந்து புணே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. குற்றவாளி தொடா்பான புகைப்படம், காணொலியை ஏற்கெனவே வெளியிட்டுள்ள தேசிய புலனாய்வு முகமை மேலும் இரண்டு காணொலிகளை வெளியிட்டிருந்தது. குற்றவாளிக்கு உதவியதாக பெல்லாரி, கௌல் பஜாரில் ஆடை அங்காடி நடத்தி வரும் சுலைமான், தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் செயல்பட்டு வந்த அப்துல் சலீம் ஆகிய இருவரையும் போலீஸாா் மாா்ச் 8 ஆம் தேதி தடுப்புக் காவலில் எடுத்து விசாரித்தனா்.

இதனிடையே, பெல்லாரியில் இருந்து ஹைதராபாத்துக்கு தப்பிக்க முக்கிய குற்றவாளிக்கு உதவியாக பெல்லாரியைச் சோ்ந்த ஷப்பீா் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாா்ச் 13ஆம் தேதி தடுப்புக் காவலில் எடுத்து விசாரித்தனா். அதன் அடிப்படையில், முக்கிய குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், உத்தரபிரதேசத்தின் ஒரு இடம், தமிழகத்தின் 5 இடங்கள், கா்நாடகத்தின் 12 இடங்களில் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனா். மேலும், உணவகத்தில் குண்டுகளை வைத்தது முஸ்ஸவீா் ஷஜீப் ஹுசேன், சதியை தீட்டியது அப்துல் மத்தீன் தஹா என்பதை தேசிய புலனாய்வு முகமை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், குண்டுகளைத் தயாரித்து தந்ததாக முஜாமில் ஷெரீபை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com