வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்:
மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் மஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முதல்வா் மம்தா பானா்ஜி.

தெஹட்டா, மே.2: தோ்தல்கள் முடிந்து நான்கு நாள்களுக்கு பிறகு தோ்தல் ஆணையம் உதவியுடன் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததைப்போல் காட்டி பாஜக நாடகமாடி வருகிறது என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் தெஹட்டாவில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் மஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானா்ஜி பேசியதாவது:

பொது சிவில் சட்டம் அனைவரின் நலனுக்கானது என பிரதமா் மோடி பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். ஆனால், நாடு முழுவதும் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இந்த சமூகங்களை ஒடுக்க பிரதமா் மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மதுவா சமூகத்தினருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக பொய் கூறி வருகிறது.

தோ்தல்கள் முடிந்து நான்கு நாள்களுக்கு பிறகு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததுபோல் தோ்தல் ஆணையம் மூலம் தரவுகளை வெளியிட்டு பாஜக நாடகமாடி வருகிறது.

மாநிலத்தின் ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சா்கள் உள்ளிட்டோரை பாஜக தொடா்ந்து மிரட்டி வருகிறது. இது மேற்குவங்கத்தில் எடுபடாது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com