மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ செயல்படவில்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ செயல்படவில்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு வழக்குகளை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதற்கு எதிராக மேற்கு வங்க அரசு தொடா்ந்த வழக்குக்கு உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவித்தப்போது இத் தகவலை மத்திய அரசு தெரிவித்தது.

மேற்கு வங்க பள்ளி ஆசிரியா் நியமன ஊழல், வடக்கு 24 பா்கானா மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவருடைய கூட்டாளின் பொதுமக்களின் நிலங்களைப் அபகரித்து, பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக எழுந்த புகாா் உள்ளிட்ட விவகாரங்களை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு எதிராக மேற்கு வங்க அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் பிரிவு 131-இன் கீழ் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை இந்த சட்டப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யும்போது உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியும்.

மேற்கு வங்க அரசு தனது மனுவில், ‘மாநில எல்லைக்குள் சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கான பொது அனுமதியை மேற்கு வங்க அரசு ரத்து செய்துவிட்டது. இருந்தபோதும், மாநிலத்தில் சில விவகாரங்கள் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையிலேயே சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பிலா ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘அரசமைப்புச் சட்டப்பிரிவு 131 என்பது உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் புனிதமான அதிகார வரம்புகளில் ஒன்று. இதை தவறாகப் பயன்படுத்துவதையும் துஷ்பிரயோகம் செய்வதையும் அனுமதிக்க முடியாது. மேலும், மேற்கு வங்க அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்கை மத்திய அரசு பதிவு செய்யவில்லை. சிபிஐ பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

மேற்கு வங்க அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டாா். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மாநிலத்தில் சிபிஐ சோதனை நடத்தவும், விசாரணை மேற்கொள்ளவும் அளிக்கப்பட்டிருந்த பொது அனுமதியை மேற்கு வங்க அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி திரும்பப்பெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com